லத்தி கூட இல்லாத சிங்கப்பெண் அதிரடி படை! அதிகாரமில்லாத டம்மி போலீசா?
முதல்வர் விஜய் அவர்களால் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட சிங்கப் பெண் அதிரடி பாதுகாப்பு படை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எதிரிகளால் சூழப்படும்போது நிராயுதபாணியாய் இருக்கும் அவர்கள் குற்றச்சம்பவத்தை எப்படி தடுப்பார்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும் சிங்கப்பெண் சிறப்பு படை உருவக்கப்பட்டுள்ளது. இதற்காக 2,545 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 49 காவல் ஆய்வாளர்கள், 98 உதவி ஆய்வாளர்கள், 196 இரண்டாம் நிலை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிங்கப் பெண் சிறப்பு படையை சட்டம்-ஒழுங்கு முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு நேரடியாக முதல் தகவல் அறிக்கை (எப்அய்ஆர்) பதிவு செய்யும் அதிகாரமும் இல்லை.
இந்த பாதுகாப்பு படையில் பணிபுரியும் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தேவைப்பட்டால் கை துப்பாக்கி வழங்கப்படும் என்று ஐஜி பவானிஸ்வரி தெரிவித்துள்ளார். குற்றச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து போலீஸ் ஒப்படைப்பது மட்டுமே இவர்களது வேலை என கூறப்படுகிறது. இந்தப் பெண் போலீசாரால் லத்தி போன்ற எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நிச்சயம் குற்ற சம்பவத்தை தடுப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். அசாதாரண சூழலில் எந்தவித பாதுகாப்பும் உபகரணங்கள் இல்லாமல் நிராயுதபாணியாய் நிற்கும் போது எதிரிகளால் நிச்சயம் அவர்கள் தாக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பெண் போலீசாருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினால் இப்படையில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு பாதுகாப்பாக இருப்பது மட்டுமின்றி அவர்களால் மற்ற பெண்களும் பாதுகாக்கப்படுவார்கள்.

