தேமுதிக யாருடன் கூட்டணி? - பிரேமலதா கொடுத்த அப்டேட்..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திலும் இன்று (ஜன.13) சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, தமிழர் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து, கரும்புகள் கட்டி தேமுதிகவின் பெண் தொண்டர்கள் பொங்கல் வைத்தனர்.
பொங்கல் பொங்கிய போது, தொண்டர்களுடன் இணைந்து பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் மற்றும் சுதீஷ் உள்ளிட்டோரும் குலவையிட்டனர். தொடர்ந்து, பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, மியூசிகல் சேர் உள்ளிட்ட பல போட்டிகளும் நடத்தப்பட்டன. அந்த போட்டிகளை தொடங்கி வைத்த பிரேமலதா, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய பிரேமலதா, விஜயகாந்த் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பொங்கல் கொண்டாட்டத்திற்காகக் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தை பிறந்தால் வழி பிறக்கும் என மாநாட்டில் தெரிவித்தது போல, விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தல் மக்களுக்கு நன்மை பயக்கும் மாபெரும் வெற்றியாகவும், மாபெரும் ஆட்சியாகவும் அமையும். இதற்காக, தேமுதிக மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு மகத்தான கூட்டணியை அமைக்கும்.
தற்போது வரை திமுகவும், அதிமுகவும் கூட்டணியை இறுதி செய்யவில்லை என்பதால், நாமும் சிந்தித்து நல்ல தெளிவான முடிவை எடுக்க வேண்டும். கூட்டணி தொடர்பாக, எங்கள் தரப்பில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து நல்ல முடிவை எடுப்போம். எந்தெந்த தொகுதியில் தேமுதிக போட்டியிடும் என்பது தொடர்பாக கூட்டணி அமைந்தவுடன் முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் படுகொலைகள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. இதனால், சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. மேலும், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை அழைத்து வாக்குறுதி கொடுத்தது போல, போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களையும் அழைத்து தமிழக அரசு பேச வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.


