அம்மா ஆசியுடன் ஸ்டாலினே மீண்டும் முதல்வர் - அதிமுக எம்எல்ஏ பேச்சால் அதிர்ந்த பேரவை..!!

 
Q
சட்டப் பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பதிலுரை வழங்கினார். தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
இந்த நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியை வெகுவாக புகழ்ந்தார். பேரவையில் பேசிய அவர், "முதல்வரின் காலை உணவு திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் ஏற்படுத்தப்பட்ட திட்டம். ஆரம்பப் பள்ளிக்கு வரும் பிஞ்சு குழந்தைகளுக்கு முதல்வர் தாயாக இருந்து சுடச் சுட உணவு வழங்கி வருகிறார். காலை உணவு திட்டம் தமிழ்நாடு இருக்கும் வரை முதல்வரை பாராட்டிக் கொண்டே இருக்கும்.
முதல்வர் ரூ.5000 ரூபாய் கொடுத்து விட்டார் என்று கூப்பாடு போட்டவர்கள் எல்லாம் இன்று அவைக்கு வரவில்லை. வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, தமிழகத்தின் முதல்வராக தலைவர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆசியோடும், புரட்சி தலைவி அம்மா ஆசியோடும் இந்த நேரத்தில் அவரை வாழ்த்துகிறேன்" என்றார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புன்முறுவல் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஓபிஎஸ்ஸுன் தீவிர ஆதரவாளர். ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் திமுகவுக்கு சென்ற நிலையில், தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவு நிலைபாடுடன் ஐயப்பன் இருந்து வருகிறார். இதனிடையே, இன்று காலை ஓபிஎஸ், முதல்வரை சந்தித்து பேசிய நிலையில், ஐயப்பன் முதல்வரை பாராட்டி பேசியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.