"குழந்தை இருந்தா தான் லீவு தருவீங்களா?" - பாஸிடம் கேள்வி கேட்ட பெண்... இணையத்தை கலக்கும் கிறிஸ்துமஸ் லீவு சர்ச்சை!
பிரிட்டனைச் சேர்ந்த குளோயீ (Chloe) என்ற பெண், வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்திற்கான விடுமுறையைச் செப்டம்பர் மாதத்திலேயே முன்கூட்டியே தனது நிறுவனத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது செயல்பாட்டு மேலாளர் (Operations Manager) சாரா, அந்த விடுமுறை விண்ணப்பத்தை நிராகரித்தார்.
நிறுவனத்தின் மேலாளர் சாரா அதற்கு அளித்த பதிலில்: "எங்கள் குழுவில் சிறிய குழந்தைகள் உள்ள ஊழியர்கள் சிலர் உள்ளனர். அவர்களுக்கும் பண்டிகைக் காலத்தில் விடுமுறை தேவைப்படும் என்பதால், விடுமுறையைச் சமமாகப் பிரித்து வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலாளரின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த குளோயீ, "நான் தான் மிகவும் முன்கூட்டியே விடுமுறைக்கு விண்ணப்பித்தேன். குழந்தைகள் இருப்பது மட்டுமே ஒருவரின் பண்டிகைத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமா? குழந்தைகள் இல்லாத ஊழியர்களின் பண்டிகை விருப்பங்கள் பொருட்படுத்தப்படாதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த மேலாளர், விடுமுறை என்பது 'முதலில் விண்ணப்பிப்பவருக்கு முதலில்' (First Come, First Served) என்ற அடிப்படையில் வழங்கப்படுவதில்லை என்றும், நிறுவனத்தின் ஒட்டுமொத்தத் தேவைகளையும், ஊழியர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டே முடிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், குளோயீ பண்டிகைக் காலத்தில் பயணம் ஏதேனும் மேற்கொள்கிறாரா என்றும் கேட்டார். அதற்கு குளோயீ, "நான் பயணம் செய்கிறேனா இல்லையா என்பது இதில் எப்படி முக்கியமாகும்?" எனத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
இந்த மின்னஞ்சல் உரையாடல்கள் 'டிக்டாக்' (TikTok) மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் வெளியாகி, 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து வைரலானது. இது குறித்து இணையவாசிகளிடையே இருவேறு கருத்துகள் கிளம்பியுள்ளன:
-
சம உரிமை ஆதரவாளர்கள்: "கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது குழந்தைகள் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொதுவானது. குழந்தைகள் இல்லாத ஊழியர்களின் தனிப்பட்ட நேரமும் சமமாக மதிக்கப்பட வேண்டும். இத்தகைய பாகுபாடு கூடாது" எனத் தெரிவித்தனர்.
-
பெற்றோர்களின் தரப்பு ஆதரவாளர்கள்: "பெற்றோர்கள் தங்களுக்காக விடுமுறை கேட்கவில்லை; தங்கள் குழந்தைகளுக்காகக் கேட்கிறார்கள். சிறிய குழந்தைகள் சாண்டா கிளாஸைப் பார்த்து மகிழும் தருணங்களில் பெற்றோர்கள் உடன் இருப்பது அவசியம்" என வாதிட்டனர்.
நிறுவனங்களில் விடுமுறை அளிப்பதில் பெற்றோர்களுக்கும், குழந்தைகள் இல்லாத பிற ஊழியர்களுக்கும் இடையே காட்டப்படும் இந்த பாகுபாடு குறித்த விவாதம் தற்போது உலகளவில் காரசாரமாக நடைபெற்று வருகிறது.

