இனி மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்குமா?
தவெக சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர் விஜய், நாளை ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.இதற்கிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசு பதவியேற்கும் வரை அவர் காபந்து முதலமைச்சராகத் தொடர்வார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முந்தைய திமுக அரசால் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் இந்த மாதம் தடையின்றி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு குடும்பத் தலைவி மத்தியில் எழுந்துள்ளது. தேர்தல் காலத்தை முன்னிட்டு, பெண்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்துக்கான தலா ஆயிரம் ரூபாயுடன் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக இரண்டாயிரம் ரூபாய் என மொத்தம் ஐயாயிரம் ரூபாய் அவர்களது வங்கிக்கணக்குகளில் கடந்த மாதம் வரவு வைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில், 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்றும் மாநிலம் மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு மட்டும் நிதியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. தற்போது தவெக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், இந்த புதிய திட்டத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர், தவெக தலைவர் விஜய்க்கும் அவரது அமைச்சரவைக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பெரிய அளவிலான கொள்கை முடிவுகள் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
புதிய திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளை வகுக்க கால அவகாசம் தேவைப்படும் என்பதால், இது தொடர்பான அறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய திமுக அரசு பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் ரூ. 1,000 உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, தவெக அரசு ரூ. 2,500 உதவித் தொகை திட்டத்தை விரைந்து செயல்படுத்தவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும் வரையிலான இடைப்பட்ட காலத்தில், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டம் தொடருமா என்பதே சாமானிய மக்களின் பிரதான கேள்வியாக உள்ளது. பழைய திட்டத்தில் பல்வேறு பொருளாதாரக் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், "அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும்" என்ற தவெக-வின் புதிய அறிவிப்பு எப்போது முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

