இப்படிக்கூட நடக்குமா..? ரூ.10 லட்சம் தங்க நகை திருடிய எலி..!
துமகூரு நகரில், 'விஸ்வாஸ் ஜுவல்லரி' என்ற பெயரில், நகைக்கடை உள்ளது. நேற்று இரவு, கடை உரிமையாளர் விஸ்வாஸ் மற்றும் ஊழியர்கள், நகைகளை கணக்கு பார்த்து, வைத்து விட்டு கடையை பூட்டி சென்றனர்.வழக்கம் போல, காலை கடையை திறந்தனர். அப்போது, 10 க்கும் மேற்பட்ட மோதிரங்கள், மூன்று செயின்கள் காணாமல் போயிருந்தன. கடையின் ஷட்டர் சேதமாகவில்லை. பூட்டியபடியே இருந்தது.உள்ளே யாரும் நுழைந்ததற்கான அடையாளங்களும் தென்படவில்லை.
நகைகள் எப்படி காணாமல் போயின என, தெரியாமல் கடை உரிமையாளரும், ஊழியர்களும் குழப்பம் அடைந்தனர்.அதன் பின், கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் ஒரு எலி, கடைக்குள் நடமாடுவது தெரிந்தது. நகைகள் இருந்த டிரேவுக்கு சென்ற எலி, அங்கிருந்த நகைகளை ஒவ்வொன்றாக வாயால் கவ்வி கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.இதையடுத்து, அந்த நகைக்கடை ஊழியர்கள் எலி சென்ற வழியில் சென்று பார்த்த போது, எலி தோண்டி வைத்திருந்த வலையில், மோதிரங்கள், செயின்களை பதுக்கி வைத்திருப்பது தெரிந்து, அவற்றை மீட்டனர்.நகைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நகைக்கடை உரிமையாளர் விஸ்வாஸ் அளித்த பேட்டி:காலை கடையை திறந்த போது, நகைகள் காணாமல் போனது தெரிந்தது. ஷட்டர் உடைக்கப்படவில்லை. உள்ளே யாரும் வந்ததற்கான அறிகுறியும் இல்லை. நகைகள் எப்படி திருடு போனது என, தெரியாமல் விழித்தோம். இது குறித்து, போலீசாரிடம் புகார் அளிப்பதற்கு முன், கண்காணிப்பு கேமராவை பார்வையிட்ட போது, எலி உணவு தேடி வந்துள்ளது.நகைகள் இருந்த டிரேவில், உணவை தேடியது. அதன் பின் ஒவ்வொரு நகையாக வாயில் கடித்து கொண்டு சென்று, தன் வளையில் சேகரித்து வைத்துள்ளது. நகைகள் அனைத்தும் சேதாரம் இல்லாமல் கிடைத்தன.இதற்கு முன் பல முறை கடையில், நகைகள் காணாமல் போயுள்ளன. அவை மர அலமாரி இடுக்கில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் திருடன் யார் என்பது எங்களுக்கு தெரியாமல் இருந்தது. இப்போது தான் அது எலியின் வேலை என்பது புரிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

