இப்படி கூட நடக்குமா ? திருடுவதற்காக மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம்..!

 
1

நாளுக்கு நாள் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், திருடுவதற்காகவே நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளனர் போலீசார்.இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .அந்த நிறுவனம் திருடும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.20,000 வரை சம்பளம் கொடுத்து வந்த தகவலும் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவல் கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம் கொரட்டகெரே காவலர்களுக்கு தெரியவந்ததை அடுத்து, திருடர்கள் மூவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தாங்கள் பெங்களூரு பசவேசுவரா நகரைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கூறினர். வெங்கடேஷ், ராகவேந்திரா, வினேஷ் பட்டீல் ஆகிய மூவரில் வெங்கடேஷ் திருட்டு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். ராகவேந்திரா, விக்னேஷ் பட்டீலின் வேலைக்கு வெங்கடேஷ் ரூ.20,000 சம்பளம் கொடுத்துள்ளார்.

வெங்கடேஷ், ராகவேந்திரா திருடும் பொருள்களை வினேஷ் பட்டீல் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

தும்கூரு மாவட்டத்தில் கேபிள் வயர்களைத் திருடுவதுதான் வெங்கடேஷ், ராகவேந்திராவின் முக்கிய வேலை. இதுபோல், கடந்த வாரம் கொரட்டகெரே அருகே உள்ள வட்டரகெரே கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கேபிள் வயர்கள் திருடு போனதாகத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களை சோதித்தபோது, அதில் வெங்கடேசும் ராகவேந்திராவும் திருடுவது பதிவாகி இருந்தது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருடர்களிடம் இருந்து ஒரு காரும் கேபிள் வயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.