வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா? இனி 94% துல்லியமாக கண்டுபிடிக்கலாம்..!

 
1

நம்மில் பெரும்பாலான மக்கள் தங்களின் பயண தேவைகளுக்காக ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளுக்கு சேவைகளை மேலும் எளிதாக வழங்க இந்தியன் ரயில்வே பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ரயில் டிக்கெட் முன்பதிவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 2026 ஆகஸ்ட் மாதம் முதல் ஏஐ உதவியுடன் ரயில் டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.


சர்வர் பிரச்சனை இனி இருக்காது.

இதுவரை ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சில நிமிடங்கள் தேவைப்பட்டது. குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் அதிக நெரிசல் இருக்கும் நேரங்களில் பலர் ஒரே நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முயற்சிப்பதால், சர்வர் பிரச்சனைகள் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. ஆனால் இனி அந்த பிரச்சனை இருக்காது. அதாவது பயணிகள் டிக்கெட்டுகளை எளிதாகவும் விரைவாகவும் முன்பதிவு செய்யும் வகையில், இந்தியன் ரயில்வே ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ( Ashwini Vaishnaw) தெரிவித்துள்ளார். இதற்கான சோதனை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அவை வெற்றிகரமாக முடிந்தால், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஏஐ உதவியுடன் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாகும். 


ஏஐ டிக்கெட் முன்பதிவின் முக்கிய பயன்கள் : 

1.தட்கல் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய முடிகிறது.

2. Rail One செயலியில் வரும் ஏஐ தொழில்நுட்பம், காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளின் டிக்கெட் உறுதியாகுமா என்பதை சுமார் 94% துல்லியத்துடன் முன்கூட்டியே கணிக்க உதவுகிறது. 

3. ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் குறைந்த நேரத்தில் அதிகமான டிக்கெட் முன்பதிவுகளை செயல்படுத்த முடியும். இதனால் சர்வர் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைந்து, சேவை மேலும் சீராக இருக்கும். 

4. IRCTC தளத்தில் பயன்படுத்தப்படும் ஏஐ தொழில்நுட்பம், சந்தேகத்திற்கிடமான பயனர் கணக்குகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உதவுகிறது. மேலும், ரயில்வே சமையலறைகளில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் கண்காணிக்கிறது.

5.ரயிலின் தற்போதைய இருப்பிடம், காலியாக உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை மற்றும் எந்த பிளாட்பார்மில் ரயில் வரும் என்பது போன்ற தகவல்களைப் பயணிகள் விரைவாகவும் துல்லியமாகவும் அறிந்து கொள்ள முடியும். 

6.ரயில் டிக்கெட் பதிவு செய்வது, டிக்கெட்டை ரத்து செய்வது மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது போன்ற செயல்கள் இனி மேலும் எளிதாகவும் விரைவாகவும் செய்ய முடியும்.