இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா?

 
az

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு தொகுதிகளுடன், முதல்வர் விஜய் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றில் அ.தி.மு.க. வென்ற நான்கு தொகுதிகளிலும் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். திருச்சி கிழக்கு தொகுதியின் அரசியல் சூழல் வேறுபட்டதாக இருந்தாலும், இந்த இடைத்தேர்தல் முழுமையாக மக்கள் தீர்ப்பின் மதிப்பைப் பற்றிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

Stalin weighs AIADMK request for support to stymie TVK's Vijay; EPS set to  meet Governor today


ஆளும் கட்சியான த.வெ.க.வுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இது மிக முக்கியமான இடைத்தேர்தல். குறிப்பாக அ.தி.மு.க.வுக்கு. தொகுதிக்கு நல்லது செய்வார்கள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளாமல், வெறும் 20 நாட்களிலேயே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, அதிகாரம், பதவிக்காக ஆளும் கட்சியில் இணைந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டிய தருணம் இது. வாக்காளர்கள் ஒரு தனிநபருக்கு மட்டுமல்ல; ஒரு கட்சி, கொள்கை மற்றும் சின்னத்திற்கும் சேர்த்துதான் வாக்களிக்கிறார்கள். மக்களின் விருப்பத்திற்கும், தேர்தல் தீர்ப்புக்கும் மாறாக நடந்துகொள்ளும் போக்குக்கு இந்த இடைத்தேர்தலில் பதில் அளிக்கப்பட வேண்டும். ராஜினாமா செய்தவர்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால், அக்கட்சியில் இருந்தே பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதுதான் தார்மீக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் சரியான அணுகுமுறையாக இருக்கும். எதிர்க்கட்சிகள், குறிப்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அரசியல் வேறுபாடுகளை தாண்டி ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். இது வெறும் அரசியல் அல்ல; தேர்தல் ஒழுக்கம் பற்றிய சோதனை.

நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு தி.மு.க. ஆதரவு வழங்க வேண்டும். ஏற்கனவே, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட, பொது வேட்பாளர் யோசனையை முன்வைத்துள்ளார். இதனால், அ.தி.மு.க. நிறுத்தும் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் எந்தக் கட்சிக்கும் தயக்கம் இருக்கக் கூடாது. ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் வி.சி.க., வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இடதுசாரிகளும் கூட, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தை விமர்சித்துள்ளன. எனவே, பொது வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் அந்தக் கட்சிகளும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதுதான் ஜனநாயக நாகரீகம். ஏற்கனவே, தி.மு.க. - அ.தி.மு.க. இணைந்து செயல்பட முயன்றதாக பேசப்பட்ட நிலையில், ஒருவேளை அ.தி.மு.க. நிறுத்தும் பொது வேட்பாளருக்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தால், அந்த அரசியல் அணுகுமுறையை வாக்காளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் இந்த இடைத்தேர்தல் வெளிப்படுத்தும்.

பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தாலும் விமர்சனங்கள் எழும். “ஆளும் கட்சியை தடுக்க இரு திராவிடக் கட்சிகளும் கைகோர்க்கின்றன” என்று பிரச்சாரம் செய்யப்படும். ஆனால் அதற்கு, “மக்கள் அளித்த தேர்தல் தீர்ப்பின் மதிப்பை காக்கவே இணைந்து குரல் கொடுக்கிறோம்” என்று எதிர்க்கட்சிகள் பதிலளிக்க வேண்டும். அந்த விளக்கம் பொதுமக்களிடையே எடுபடும். ஏனெனில் பொதுமக்கள், அதிகார அரசியலை விட நியாய அரசியலையே அதிகம் மதிக்கிறார்கள். இன்று ஒன்றாக நிற்கவில்லை என்றால், நாளை இதே நிலை மற்ற கட்சிகளுக்கும் ஏற்படலாம். ஆனால், இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற பழைய அரசியல் வாதத்தை முன்வைத்து அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் களம் காணாமல் பின்வாங்கினால், அது தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் எதிர்கால பாதை குறித்து பெரும் கேள்விகளை எழுப்பும். அந்த நம்பிக்கை உடையத் தொடங்கினால், எதிர்க்கட்சிகளின் இடமே குறைந்து போகும். இல்லையெனில் நாளை எதிர்க்கட்சிகளே தேவையற்றதாகிவிடும். இடைத்தேர்தலில் ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களே மீண்டும் போட்டியிட்டாலும் சரி, அல்லது த.வெ.க. சார்பில் புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் சரி, அந்த வேட்பாளர்கள் 'டெபாசிட்' இழக்கும் அளவுக்கு மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். அதுதான் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலாக அமையும். அப்படியான தீர்ப்புதான் இனி இதுபோன்ற அரசியலை யாரும் எளிதாக முயற்சிக்க முடியாத சூழலை உருவாக்கும்.