இனி டாஸ்மாக் கடைகள் சுத்தமாக மாறுமா? தூய்மைப் பணிகளுக்காகக் கோடி கணக்கில் நிதி ஒதுக்கிய டாஸ்மாக் நிர்வாகம்!

 
tasmac

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மாதம் ரூ.5,000, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ரூ.4,000, கிராமப்புற மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் மாநகராட்சி பகுதிகளில் 842 கடைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 835 கடைகள், கிராமப்புற மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் 2,371 கடைகள் என மொத்தம் 4,048 சில்லறை மதுபான விற்பனை கடைகள் உள்ளன.

இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அக்டோபர் மாதத்திற்கான தொகை, செப்டம்பர் மாதத்திற்கான மேற்பார்வையாளரின் சம்பளத்துடன் சேர்த்து செப்.30 அன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்படும் தொகையை கடையின் தினசரி தூய்மைப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். துடைப்பம், சுத்தம் செய்யும் பொருட்கள், கிருமிநாசினி, பினாயில், குப்பைத் தொட்டிகள், குப்பைப் பைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும், உள்ளூர் நபரை தற்காலிகமாக தூய்மைப் பணிக்கு ஈடுபடுத்தவும் பயன்படுத்தலாம்.

மேலும், கடைகளில் குடிநீர் கேன்கள் வாங்குதல், வாட்டர் டிஸ்பென்சர் அல்லது குடிநீர் பாத்திரத்தை வாடகைக்கு எடுத்தல் அல்லது பராமரித்தல், குடிநீர் செலவு மற்றும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பிற அடிப்படை வசதிகளுக்கும் இந்தத் தொகையை பயன்படுத்தலாம்.

அதேநேரத்தில், கடை வாடகை, மின்சாரக் கட்டணம், கட்டிடப் பழுதுபார்ப்பு, மரச்சாமான்கள் அல்லது உபகரணங்கள் வாங்குதல் போன்ற செலவுகளுக்கு இந்தத் தொகையை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் தொகை, கடை மேற்பார்வையாளரின் சம்பளம் அல்லது படியாக கருதக் கூடாது. ஒவ்வொரு மாதமும் செலவினப் பதிவேடு பராமரிக்க வேண்டும்; அதற்கான ரசீதுகள் மற்றும் ஆவணங்களை 3 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொகைக்கு ஆண்டுதோறும் 5 சதவீத உயர்வு வழங்கவும் டாஸ்மாக் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு 01.04.2027 முதல் அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.