சென்னையில் மழை பெய்யுமா? இல்லையா? - 'ஹிட் ஆர் மிஸ்' நிலவரம் குறித்து வெதர்மேன் சொன்ன அப்டேட்!

 
1

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (யு.ஏ.சி) காரணமாகத் தற்போது கிழக்கிலிருந்து காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 2 முதல் 3 நாட்களுக்குக் குளிர்ச்சியான மற்றும் இதமான வானிலை நிலவும். வரும் திங்கட்கிழமை வரை இந்தச் சூழல் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் இந்த இதமான காலநிலையை அனுபவிக்கலாம் என  தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா & கடலோரப் பகுதிகள்: இன்று (சனிக்கிழமை) புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளது.

சென்னை & புறநகர் (KTCC): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்யுமா என்பது ‘ஹிட் ஆர் மிஸ்’ (Hit or Miss) என்ற நிலையிலேயே உள்ளது. இருப்பினும், செங்கல்பட்டு மாவட்டக் கடலோரப் பகுதிகளில் மழைக்கு அதிக வாய்ப்புள்ளது.

திங்கட்கிழமை வரை வாய்ப்பு: சென்னையில் ஒருசில இடங்களில் திங்கட்கிழமை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னை - நெல்லூர் கடற்கரை அருகே வலுவிழக்கும் வரை இந்த வாய்ப்பு நீடிக்கும்.

அடுத்த வாரத்தில் காற்றின் திசை மாறப்போவதாக வெதர்மேன் எச்சரித்துள்ளார். வங்கக்கடல் கிளை வழியாகப் பருவமழை காற்று அந்தமான் கடலை நோக்கி வீசத் தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த வாரம் முதல் மேற்குத் திசையிலிருந்து காற்று வீசத் தொடங்கும்.

தமிழகத்தின் மற்ற உள் மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் வரும் நாட்களில் மிகச் சிறப்பான மழை பெய்யக்கூடும் என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்துச் சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடக்கம்

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்குப் பருவமழை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. மேலும், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நீடித்து வருகிறது.

மாவட்ட வாரியான மழை முன்னறிவிப்பு

இன்று (மே 16): விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை மே 17: திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்: சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை நிலவரம்

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 38.4டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 5டிகிரி செல்சியஸ் வரை குறைந்து காணப்படுகிறது. அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.