மூத்த குடிமக்களின் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் இந்திய ரயில்வேக்கு இத்தனை கோடி மிச்சமா ?

 
1

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கும் போக்குவரத்து சேவையை ரயில்வே நிர்வாகம் அளித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

முக்கியமாக, தொலைதூர பயணங்களுக்கு சாமானிய மக்களுக்கு ரயில் சேவை வரப்பிரசாதமாகவும் விளங்கி வருகிறது. இந்த ரயில்களில் பயணிக்கும் 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவீதம் கட்டண சலுகையும், கடந்த 2009-ம் ஆண்டு முதல் ரயில்வே துறை வழங்கி வந்தது. இந்த சலுகை மூத்த குடிமக்களுக்கு பேருதவியாக இருந்தது.

இதற்கிடையில், 2020-ம் ஆண்டு மார்ச்சில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு, ரயில் சேவை படிப்படியாக தொடங்கியபோது, ரயில்வேயில் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது.

ரயிலில் கட்டண சலுகை ரத்தால், 2020-ம் ஆண்டு முதல் பயணத்தை மூத்த குடிமக்கள் படிப்படியாக தவிர்க்கத் தொடங்கினர். ஆன்மிக தளங்களுக்கு செல்லவும், மருத்துவ சிகிச்சைக்கு சென்று வரவும் மூத்தகுடிமக்களுக்கு இந்த கட்டண சலுகை பேருதவியாக இருப்பதால், இதை மீண்டும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், இதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. ஏனெனில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,667 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. அதனால் கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாது என்று திட்டவட்டமாக அறிவித்தது ரயில்வே.

மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ5,800 கோடி வருவாய் இந்திய ரயில்வே நிர்வாகத்துக்கு மிச்சமாகி உள்ளது. மூத்த குடிமக்களின் நலனை பாராமல், வருமானத்திலேயே ரயில்வே நிர்வாகம் முனைப்பாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.