டிமான்ட்டி காலனி 3 ரிலீஸ் ஆகுமா? தயாரிப்பாளர் போட்ட வழக்கால் நிறுத்தப்பட்ட வெளியீடு!
நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிமான்ட்டி காலனி'. த்ரில்லர் கதை களத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, அருள்நிதியின் தந்தை தயாரித்திருந்தார். அதைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2024- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி 'டிமான்ட்டி காலனி-2' வெளியானது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதையடுத்து, அருள்நிதி நடிப்பில் இயக்குநர் ஞானமுத்து, ஃபேஷன் ஃபிலிம் ஃபேக்டரி (Passion Film Factory) என்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து 'டிமான்ட்டி காலனி- 3' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு 'ஏ' தணிக்கைச் சான்று கிடைத்திருந்த நிலையில் வரும் அக்டோபர் 01- ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், 'டிமான்ட்டி காலனி- 2' திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான விஜய சுப்பிரமணியன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த மனுவில், "வைட் நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான விஜய சுப்பிரமணியன், கடந்த 2023- ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்துவுடன் இணைந்து 'டிமான்ட்டி காலனி- 2' தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
ஒப்பந்தத்தில், எதிர்க்காலத்தில் 'டிமான்ட்டி காலனி' பெயரைப் பயன்படுத்தி எடுக்கும் அனைத்தும் பாகத்தையும் விஜய சுப்பிரமணியனுடன் இணைந்து தயாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், விஜய சுப்பிரமணியனின் அனுமதி பெறாமல் இயக்குநர் அஜய் ஞானமுத்து 'டிமான்ட்டி காலனி -3' திரைப்படத்தை ஃபேஷன் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து அதை ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியிட விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து சமரசத் தீர்ப்பாயத்தை அணுகியுள்ளோம். விசாரணையானது தொடங்கப்படாத நிலையில் 'டிமான்ட்டி காலனி- 3' திரைப்படத்தை ஓடிடி தளத்தில் ரூபாய் 17 கோடிக்கு திரைப்படக் குழு விற்பனை செய்ததுடன் திரையரங்குகளில் வெளியிட விநியோகஸ்தர்களை அணுகியுள்ளது. எனவே, சமரச தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு முன்பாக இந்த திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்; அத்துடன், இந்த திரைப்படம் மூலம் கிடைத்த வருவாயை பொது வங்கிக் கணக்கில் வைக்க உத்தரவிட வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நேற்று (செப்.17) விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு, திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

