இப்படி கூட மரணம் வருமா..? குத்துவிளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு..!
தூத்துக்குடியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பிரேமா (வயது 58). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரேமா தனது வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி வைத்துச் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் உடுத்தியிருந்த சேலையின் முந்தானையில் தீ பிடித்துள்ளது.
கண் இமைக்கும் நேரத்திற்குள் தீ உடல் முழுவதும் பரவியதில் அவர் படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பிரேமாவை மீட்டு உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 8-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருந்தபோதும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



