இப்படி கூட மரணம் வருமா..? கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தபோது மைதானத்தில் மயங்கி விழுந்து இறந்த வாலிபர்..!
விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஜிஸ்கான் (வயது 40). இவர் இன்று காலை தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அஜிஸ்கான் பந்து வீசி (பௌலிங்) செய்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வலி அதிகரித்த சிறிது நேரத்திலேயே அவர் மைதானத்தில் மயங்கி விழுந்ததாக சக நண்பர்கள் தெரிவித்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அஜிஸ்கானை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அஜிஸ்கான் உயிரிழந்த சம்பவம், சாலாமேடு பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அஜிஸ்கானின் திடீர் மரணம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

