இப்படி கூட மரணம் வருமா..? மனைவியை புகைப்படம் எடுக்க முயன்ற கணவர் பலி..!
ஹைதராபாதில் துர்கம் செருவு கேபிள் பாலம், சுற்றுலா பயணியரின் முக்கிய ஸ்பாட்டாக விளங்குகிறது. இதன் பிரமாண்ட வடிவமைப்பை பார்த்து, பாலத்தில் ஏறி பலர் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். இதுபோல் ஒரு தம்பதி, அந்த பாலத்தின் அழகை ரசிக்க வந்தனர்.
அப்போது, தன் மனைவியை புகைப்படம் எடுக்க அவரது கணவர் முயன்றார். எதிர்பாராதவிதமாக, அவ்வழியாக வேகமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார், கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை மீது ஏறி புகைப்படம் எடுக்க முயன்ற நபர் மீது மோதி சென்றது. இதில், அவர் படுகாயம் அடைந்தார்.
உடனே அருகே இருந்த நபர்கள், பாதிக்கப்பட்ட நபரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த நபரின் பெயர் ஷ்யாம் ராஜ், 32. அவர் மீது மோதிய காரின் டிரைவர், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே அந்த காரின் பதிவு எண், கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெயரில் இருப்பது கண்டறியப்பட்டது.

