இப்படி கூட மரணம் வருமா..? சார்ஜ் போட்டு லேப்டாப்பில் கேம் விளையாடிய 11-ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி!
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பத்தில் உள்ள கற்குழாய் சாலை பகுதி சேர்ந்தவர் செந்தில். பெயிண்டர் வேலை பார்க்கும் இவருடைய மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு சீனிவாசன், ஜீவா, ரித்தி என மூன்று மகன்கள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகனான சீனிவாசன், மணவாள நகரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இன்று விடுமுறை நாள் என்பதால், சீனிவாசன் தனது நண்பனின் லேப்டாப்பை வாங்கி வந்து, அதனை வீட்டில் வைத்து கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. லேப்டாப்பில் சார்ஜ் தீர்ந்து போனதால், லேப்டாப்பை சார்ஜ் போட்டு தரையில் வைத்து விட்டு, அதன் அருகிலேயே மாணவன் சீனிவாசன் படுத்து உறங்கியுள்ளான்.
வெளியே சென்றிருந்த சீனிவாசனின் தாயார் கவிதா, பிற்பகல் 2 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மகனின் கையில் மின்சாரம் தாக்கிய தழும்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன், சீனிவாசனை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சீனிவாசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சீனிவாசனின் கடைசி தம்பி ரித்தி மருத்துவமனையில் அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது. நண்பனின் லேப்டாப்பை வாங்கி வந்து வீட்டில் சார்ஜர் போட்ட நேரத்தில், மின்சாரம் தாக்கி பதினோராம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

