பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை புறக்கணிக்கும் முதல்வர் விஜய்?
அக்டோபர் 30 பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா - தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் விஜய்யின் பசும்பொன் பயணம், கடைசி நேரத்தில் சில அமைச்சர்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசும்பொன் மண்ணில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவது சரித்திரப் பெருமை. தேவர் நினைவிடத்தில் கால் பதித்தால் அது விஜய்க்கே பெருமை சேர்க்கும் என்று தொண்டர்கள் எதிர்பார்த்தனர். கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். இந்த ஆண்டு முதல்வராக விஜய் நேரில் வருவார் என்று எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. இதற்காக முதல்வர் விஜய்யே பசும்பொன் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் 19 இடங்களுக்கு சென்று பாதுகாப்பு ஆய்வு செய்தனர். ஹெலிபேட் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது.
இந்த சூழ்நிலையில் தான் திருப்பம். அமைச்சர்கள் நிர்மல்குமார், பிரபு மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் விஜய்யை பசும்பொன்னுக்கு அழைத்து வந்தால் தான் முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்ய முடியும் என்று வலியுறுத்தினர். காரணம், அதிமுகவில் முக்குலத்தோர் சமூகத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்ற ஆதங்கம் உள்ளது. மேலும் *டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்ததால், அந்த சமூக மக்கள் டிடிவி தினகரன் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த வெற்றிடத்தை தவெக பயன்படுத்திக்கொள்ள விஜய் பசும்பொன் வந்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் கூறினர். அதிமுகவின் வலுவான கட்டமைப்பு, முக்குலத்தோர் ஆதரவு தவெக பக்கம் திரும்பும், சிவகங்கையில் உள்ள ஆதரவு அலை நிலைக்கும் என்பது அவர்களின் கணக்கு. ஆனால், இம்மானுவேல் சேகரனார் குருபூஜைக்கு விஜய் செல்லாத நிலையில், தேவர் ஜெயந்திக்கு மட்டும் சென்றால் சர்ச்சை வரும் என்று கூறி தவெகவில் உள்ள சில அமைச்சர்கள், அங்கு செல்ல வேண்டாம் என முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவிற்கு முதல்வர் விஜய் செல்லவில்லை. முதல்வராக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர், ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உட்பட முதல்வராக இருந்த அனைவரும் அவர்கள் பதவியில் இருக்கும் போது பசும்பொன் வந்து சென்றுள்ளனர். முதல்வர் விஜய் தவிர்த்து இருப்பது அந்த மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

