கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை வெட்டிக் கொன்ற மனைவி!
தேனியில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகே உள்ள மாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் சென்றாயன் (39). மைக்செட் மற்றும் பந்தல் வேலை செய்து வரும் இவருக்கும் குச்சனூரைச் சேர்ந்த பூங்கொடி (32)என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. மாணிக்கபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சென்றாயன் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த உறவினரான இராஜபிரபு (23) என்பவருக்கும், பூங்கொடிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மது போதையில் பக்கத்து வீட்டு நபர்களை அடித்த வழக்கில் சென்றாயன் சிறைக்கும் சென்று வீட்டிற்கு வந்த போது மனைவி பூங்கொடி வீட்டில் இல்லை, குச்சனூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியை அழைத்து வருவதற்காக அங்கு சென்று பார்த்த போது தனது மனைவி பூங்கொடியும், உறவினரான இராஜபிரபுவும் ஒன்றாக இருப்பதை பார்த்து சென்றாயன் சண்டையிட்டுள்ளார் . பின்னர் அவரை சமாதானம் செய்து இராஜ பிரபு, சென்றாயன் மற்றும் அவரது மனைவி பூங்கொடி என மூவரும் ஒரே இரு வாகனத்தில் மாணிக்கபுரத்திற்கு புறப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கடந்த ஐந்தாம் தேதி குச்சனூர் அருகே உள்ள வனப்பகுதியில் சென்றாயன் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சென்றாயனை கொலை செய்துவிட்டதாக இராஜபிரபு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இராஜபிரபுவிடம் விசாரணை செய்த சின்னமனூர் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்றாயன் கொலை வழக்கில் அவரது மனைவி பூங்கொடி மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குச்சனூரில் இருந்து தானும், கணவர் சென்றாயன், மற்றும் இராஜபிரபு பைக்கில் சென்றபோது ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பூங்கொடியை சின்னமனூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.