ஹனுமன் கோவிலில் தொழுகை நடத்த அனுமதித்தது ஏன்? யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு..!!
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை யில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலுக்கு, பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் முறைகேடு நடந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏ ற்படுத்தி உள்ளது.
இது குறித்து எட்டு பேரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த விவகாரம் உ.பி., அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இந்நிலையில், அயோத்தியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமையும் என, யாரும் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. இந்த யோசனையை சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் கேலி செய்தனர். இன்று, அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அதற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதால், அக்கட்சியினர் விரக்தியில் உள்ளனர். ஜமா மசூதிக்குள் சென்று யாராவது ஹனுமன் சாலிசா சொல்ல முடியுமா? அதை எந்த அரசாவது அனுமதிக்குமா? காங்., அல்லது சமாஜ்வாதியால் அதை செய்ய முடியுமா? அக்கட்சிகளால் செய்ய முடியாது என்றால், ஹனுமன்கர்ஹி கோவில் படிகளில் மட்டும் தொழுகை நடத்த அனுமதி அளித்தது ஏன்? அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கான நீண்டகால கோரிக்கையை பா.ஜ., தான் நிறைவேற்றியது. காங்., - சமாஜ்வாதி கட்சிகள் ராமரின் இருப்பு குறித்த ஆதாரங்களை கேள்விக்குள்ளாக்கின. சனாதன தர்மம் குறித்து பேச இரு கட்சிகளுக்கும் என்ன அருகதை இருக்கிறது? இவ்வாறு அவர் பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சியில், 2003ல், ஹனுமன்கர்ஹி கோவில் படிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதனருகே இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்ய முயற்சி நடந்ததாகவும், பா.ஜ., நீண்டகாலமாக குற்றஞ்சாட்டி வருகிறது. முன்னாள் டி.ஜி.பி.,யும், தற்போதைய பா.ஜ., - எம்.பி.,யுமான பிரிஜ் லால், அப்போது உள்ளூர் போலீசார் தலையிட்டு அதற்கு அனுமதி மறுத்ததாக கூறியிருந்தார். இதை குறிப்பிட்டே தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

