விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?- காவல்துறை விளக்கம்
முல்லை நகர் சந்திப்பில் சிறிய தெருமுனை பிரசாரம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்பதால் எம்கேபி நகர் காவல் ஆய்வாளரின் பரிந்துரையை ஏற்று தவெகவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

பெரம்பூரில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என விளக்கம் அளித்துள்ள பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், “மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள பெரம்பூர் முல்லை நகர் சந்திப்பானது சென்னை மாநகர தேர்தல் நடத்தும் அலுவலரால் எஸ் எம் நகர் 82 ஆவது பிளாக் சந்திப்பு என குறிப்பிட்டு சிறிய அளவிலான தெருமுனைப் பிரசாரம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் மனுவில் மேற்படி முல்லை நகர் சந்திப்பில் தெருமுனை பிரசாரம் நடத்துவதற்கு பங்கு பெறுவோர்களின் எண்ணிக்கை 3000 என குறிப்பிடப்பட்டுள்ளதால் அனுமதி வழங்க பரிந்துரை செய்ய இயலாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே மனுதாரர் தங்களது பிரசாரம் நடத்த வேறு ஒரு இடத்தினை தேர்வு செய்து மனு அளித்தால் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது. இதை காரணம் காட்டிதான் தேர்தல் அலுவலர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

