ஏன் இந்த ஓரவஞ்சனை? – மற்ற மாதங்களுக்கு 31, பிப்ரவரிக்கு மட்டும் 28 ஆனது எப்படி?

 
1

பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏன் 28 நாட்கள் இருக்கின்றன என்பது பலருக்கும் வியப்பளிக்கும் ஒரு புதிராகும். இந்த சுவாரஸ்யமான கேள்விக்குப் பின்னால் பண்டைய ரோமானியப் பேரரசின் வரலாறும், மன்னர்களின் கௌரவப் போட்டியும் மறைந்துள்ளன. தொடக்கத்தில் மார்ச் முதல் டிசம்பர் வரை பத்து மாதங்கள் மட்டுமே கொண்ட நாட்காட்டியே புழக்கத்தில் இருந்தது.

பண்டைய ரோமானியர்கள் விவசாயத்தையே பிரதானமாக நம்பி வாழ்ந்ததால், குளிர்காலத்தை அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை. 304 நாட்களை மட்டுமே கொண்ட அந்த நாட்காட்டியில், எஞ்சிய நாட்களை அவர்கள் பெயர் சூட்டப்படாத 'குளிர்காலம்' என ஒதுக்கி வைத்திருந்தனர். பிற்காலத்தில் வந்த மன்னர்கள் இந்த இடைவெளியை நிரப்ப ஜனவரி மற்றும் பிப்ரவரி என இரண்டு புதிய மாதங்களைச் சேர்த்தனர்.

ரோமானியர்களுக்கு இரட்டைப்படை எண்கள் மீது ஒருவித அச்சமும் நம்பிக்கையின்மையும் இருந்ததால், பெரும்பாலான மாதங்களை ஒற்றைப்படை நாட்களைக் கொண்டதாக மாற்றினர். சந்திரனின் சுழற்சியைக் கணக்கிட்டு நாட்காடியை வடிவமைத்தபோது, 355 நாட்கள் கொண்ட ஓராண்டில் இறுதியில் மீதமிருந்த 28 நாட்கள் மட்டும் பிப்ரவரி மாதத்திற்கு ஒதுக்கப்பட்டன. அக்காலத்தில் பிப்ரவரிதான் ஆண்டின் கடைசி மாதமாகக் கருதப்பட்டது.

நாட்காட்டியின் வரலாற்றில் அடுத்த பெரும் மாற்றம் ஜூலியஸ் சீசர் காலத்தில் நிகழ்ந்தது. அவர் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு 365 நாட்களாக ஆண்டை மாற்றினார். இருப்பினும், பிப்ரவரி மாதத்திற்கு மட்டும் அதன் பழைய 28 நாட்களே தொடர அனுமதிக்கப்பட்டன. இதன் பின்னர்தான் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையிலான 'நாட்கள் போர்' தொடங்கியது.

ஜூலியஸ் சீசரின் நினைவாக ஜூலை மாதத்திற்கு 31 நாட்கள் வழங்கப்பட்டிருந்தது. அவருக்குப் பின் வந்த அகஸ்டஸ் சீசர், தன் பெயரிலான ஆகஸ்ட் மாதத்திற்கு 29 நாட்கள் மட்டுமே இருப்பதை விரும்பவில்லை. ஜூலை மாதத்திற்கு இணையாக தன் மாதமும் இருக்க வேண்டும் என்ற கௌரவத்திற்காக பிப்ரவரியிலிருந்து இரண்டு நாட்களைப் பறித்து ஆகஸ்ட் மாதத்துடன் இணைத்துக் கொண்டார். இதனால்தான் ஜூலை, ஆகஸ்ட் என அடுத்தடுத்த மாதங்கள் 31 நாட்களைக் கொண்டுள்ளன.

சூரியனின் சுழற்சி துல்லியமாக 365.24 நாட்கள் என்பதால், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஒரு கூடுதல் நாள் உருவாகிறது. அந்த ஒரு நாளை எங்கே சேர்ப்பது என்ற குழப்பம் வந்தபோது, நாட்காட்டியின் கடைக்குட்டியான பிப்ரவரியே தேர்ந்தெடுக்கப்பட்டது. இவ்வாறுதான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாட்களைக் கொண்ட 'லீப் வருடம்' பிறந்தது.