நாங்கள் ஏன் ஆட்சியை கலைக்க வேண்டும்? மக்களே கலைத்து விடுவார்கள்..! - தவெக அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்!

 
udhai

சென்னை அடையாறு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் மன்றம் கலையரங்கத்தில், சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் மாதம் முழுவதும் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திய திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கடந்த 4-ஆம் தேதியோடு தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் கழக நிர்வாகிகளை தினமும் காலை, மாலை சந்தித்து வருகிறேன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நான் கலந்து கொள்ளும் முதல் கட்சிக் கூட்டம் இதுதான்.

நாம் அனைவரும் கலைஞரின் உடன்பிறப்புகள். நாம் என்றைக்கும் மக்களோடு இருப்போம். வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் வீதிக்கு வந்து மக்களுக்காக போராடுபவர்கள்தான் கலைஞரின் தொண்டர்கள். வெற்றி பெற்றபோது தலைக்கனம் அடைந்ததும் இல்லை, தோல்வி அடைந்தபோது வீட்டுக்குள் முடங்கியதும் இல்லை. என்றும் மக்கள் பணிக்கே முக்கியத்துவம் கொடுப்போம். அதைத்தான் கலைஞர் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

நாம் பார்க்காத வெற்றியும் இல்லை பார்க்காத தோல்வியும் இல்லை. அதிமுகவை பாதியாக உடைத்துவிட்டார்கள். ஆனால் எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது. சோபா மாடல் ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ளன. ஆளுங்கட்சியைவிட திமுக எதிர்க்கட்சியாகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவை தொட முடிகிறது. ஆனால் திமுகவை மட்டும் தொட முடியவில்லை என்பதால் ஆளுங்கட்சியினர் பொய் வழக்குகள் போடுகின்றனர்.

ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்துவிட்டோம். ரீல்ஸ் மூலமே ஆட்சியை நடத்தலாம் என்று நினைக்கிறார்கள். தமிழக வெற்றி கழகத் தலைவர் எதற்கெடுத்தாலும் ரீல்ஸ்தான் வெளியிட்டு வருகிறார். அவர்கள் எந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்களோ, அந்தத் தொகுதிக்குக்கூட செல்லாமல் வேறு தொகுதிக்குச் சென்று நன்றி தெரிவிக்கிறார்கள். தற்போது நடப்பது ரீல்ஸ் ஆட்சிதான். எங்கு பார்த்தாலும் மின்வெட்டு. எங்கு பார்த்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள்.

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் சேப்பாக்கம் மைதானத்தில் மாத்திரையை பொடியாக்கி பயன்படுத்துகிறார். அது என்ன என்று கேட்டால், குழந்தைக்கான மாத்திரை என்று கூறுகிறார். அந்த அமைச்சர் எதை பொடியாக்கினார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் கண்கூடாக பார்த்துள்ளனர்.

தினமும் காலையில் எழுந்தவுடன் திமுக ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள். நாங்கள் ஏன் ஆட்சியைக் கலைக்க வேண்டும்? மக்களே கலைத்து விடுவார்கள். சட்டப்பேரவையில் ஊழல் செய்தவர்களை விடமாட்டோம் என்று கூறிய முதலமைச்சரே, தற்போது ஊழல் செய்தவர்களைத் தனது கட்சிக்குள் அழைத்துக் கொண்டிருக்கிறார். சட்டப்பேரவையில் அவர் பேசும்போது, நாம் சட்டப்பேரவையில் இருக்கிறோமா? இல்லை திரையரங்கில் முதல் காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறோமா என்றே தெரியவில்லை.

கடந்த தேர்தலில் யார் நமது உண்மையான எதிரி என்பது தெரியாமல் போய்விட்டது. ஆனால் இப்போது தெரிந்துவிட்டது. தேர்தலின் போது சாலையில் சென்று வாக்கு கேட்டோம்; ஆனால் வீட்டுக்குள் சென்று வாக்கு கேட்கத் தவறிவிட்டோம்.

நமது கூட்டணியில் இருந்தவர்கள் நமது வாக்குகளைப் பெற்று அமைச்சர்களாகிவிட்டனர். சோபாவை பிடுங்கிவிடுவார்கள் என்ற பயத்தால் அவர்கள் பேசாமல் இருக்கிறார்கள். நாங்கள் மிசாவையும், அவசரநிலையையும் பார்த்தவர்கள். திமுக தொண்டர்கள் எதற்கும் பயப்பட மாட்டார்கள். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். தோளோடு தோளாக நிற்பேன். சோபா மாடல் ஆட்சி செய்யும் தவறுகளை மக்களிடம் எடுத்துச் செல்வோம். தமிழ்நாட்டில் மீண்டும் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும்" என்றார்