விவசாயிகள் மீது குண்டாஸ் ஏன்? - காவல்துறை விளக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் போராட்டத்தில் 7 விவசாயிகள் கைது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் அலகு 3 விரிவாக்க பணிக்கு 3000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தினை கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டத்தினை கைவிட வலியுறுத்தி மேல்மா, குரும்பூர், நர்மா பள்ளம், தேத்துறை, காட்டுக்குடிசை நெடுங்கல் உள்ளிட்ட 9 ஊர் கிராம மக்கள் கடந்த 125 நாட்களாக தனியார் நிலம் ஒன்றில் கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு போலீசார் கொட்டகையை அகற்றி போராட்டகாரர்களுக்கு ஆதரவாக இருந்த 20 நபர்களை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருபது நபர்களையும் வேலூர், மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட சிறைச்சாலையில் அடைத்தனர். தற்போது இருபது நபர்களில் போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ், உள்ளிட்ட ஏழு நபர்கள் மீது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது ஏன்? என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள் என்றும், அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.