அடுக்குமாடி குடியிருப்புகளின் மின்கட்டணம் 3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன்?

 
anbumani

 அறிவிக்கப்பட்ட மின்கட்டணக் குறைப்பை செயல்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின்தூக்கி இல்லாத  அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் ஓர் அலகுக்கு  8.15ரூபாயிலிருந்து   ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி அறிவித்து 3 மாதங்களாகிவிட்ட நிலையில், இன்று வரை அக்கட்டணக் குறைப்பு நடைமுறைப் படுத்தப் படவில்லை. பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடந்த இரு மாத சுழற்சிக்கான மின்கட்டணம், பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ.8.15 என்ற அளவில் தான் கணக்கிடப் பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்கட்டணக் குறைப்பை செயல்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

anbumani

அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டுக்கான மின்கட்டணக் குறைப்பு நவம்பர் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று 31.10.2023 ஆம் தேதியிட்ட  ஆணை எண்: 9-&இன் மூலம்  தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நவம்பர்&-திசம்பர் சுழற்சியில்  குறைக்கப்பட்ட மின்கட்டணம் நடைமுறைப்படுத்தபட்டிருக்க வேண்டும். ஆனால், மின்கட்டணம் குறைக்கப்படாததற்கான காரணம் குறித்து கேட்ட போது, மின்கட்டணக் குறைப்பால் பயனடையும் அடுக்குமாடி வீடுகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று மின்வாரியம் கூறி வருகிறது. இது அப்பட்டமான ஏமாற்று வேலை. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மாடிகளின்  எண்ணிக்கை, குடியிருப்புகளின் எண்ணிக்கை,  மின் தூக்கி உள்ளதா, இல்லையா? என்பன உள்ளிட்ட விவரங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆவணத் தொகுப்புகளில் உள்ளன. அவற்றின் உதவியுடன் ஒரு வாரத்தில்  கட்டணக் குறைப்பால் பயனடையும் அடுக்குமாடி குடியிருப்புகளை கண்டறிந்து கட்டணக் குறைப்பை  நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். வீடு வீடாக கணக்கெடுத்திருந்தால் கூட, 15 நாட்களில் இந்த பணியை முடித்திருக்க முடியும். ஆனால்,  3 மாதங்களாகியும்  இன்று வரை கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம்  விளக்கமளிக்க வேண்டும்.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்கட்டணக் குறைப்பு மிக மிகக் குறைவானது தான். 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் வீடுகளுக்கான மின்கட்டணம் தான், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு இணைப்புகளுக்கும் வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, மாதத்திற்கு 100 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால்,  பொதுப்பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை, வணிகப்பயன்பாட்டுக்கான கட்டணத்தை விட அதிகமாக சுமார் 10 மடங்கு அளவுக்கு உயர்த்திய தமிழ்நாடு அரசு, இலவச மின்சாரத்தையும் ரத்து செய்து விட்டது. அதனால் பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம் 13 மடங்கு அளவுக்கு அதிகரித்தது.

eb


எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு மின்கட்டண உயர்வுக்கு முன்பாக பொதுப்பயன்பாட்டுக்காக 150 அலகுகள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால், அதற்கான கட்டணமாக ரூ.112.50 காசுகள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே அளவு மின்சாரப் பயன்பாட்டுக்கு  ரூ.1427 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 13 மடங்கு அதிக உயர்வு ஆகும். இப்போது முதலமைச்சர் அறிவித்துள்ள கட்டணக் குறைப்பின்படி, இனி 150 அலகு பயன்பாட்டிற்கு ரூ. 1029  கட்டணம் செலுத்த வேண்டும். இது பழைய கட்டணத்தை விட 9 மடங்கு அதிகம் ஆகும். பொதுப்பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தை 13 மடங்கு உயர்த்தி விட்டு,  அதில் மிகக்குறைந்த அளவை மட்டும்  குறைப்பதாக  அறிவித்த  தமிழக அரசு, அதையும் நடைமுறைப்படுத்தாதது ஏன்?

தமிழ்நாட்டு மக்கள் மீது கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட  மிகக் கடுமையான தாக்குதல் மின்சாரக் கட்டண உயர்வு தான். அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில்  இருந்து  தமிழ்நாட்டு மக்களால் இன்னும் மீள முடியவில்லை. எனவே,  அறிவிக்கப்பட்ட அளவில் இல்லாமல், அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை ஏற்கனவே இருந்த  அளவுக்கு  குறைக்க வேண்டும்; முன்பு வழங்கப்பட்டதைப் போல பொதுப்பயன்பாட்டுக்கும் 100 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அத்துடன் குறைக்கப்படாத மின்கட்டணத்தை செலுத்தும்  அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, அவை கூடுதலாக செலுத்திய மின்சாரக் கட்டணத்தை  திருப்பி வழங்கவும் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.