முதலமைச்சர் அறை மாற்றப்படுவது ஏன்? சட்டசபையில் காரசாரமாக நடந்த விவாதத்தின் பின்னணி!

 
1

சட்டசபையில் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நாமக்கல் மாளிகையை கட்டிக் கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். அங்கு இப்போ முதலமைச்சர் விஜய் செல்கிறார். யார் எங்கு செல்வது என்பது அவர்களுடைய விருப்பம். டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் இந்த டெண்டரில் எதோ கோளாறு இருக்கிறது என்று கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நான் கேட்க விரும்புவது ஏன் அந்த அறையில் இருந்து பணியை பார்க்க வேண்டியது தானே? நாமக்கள் மாளிகையை முழுமையாக எடுத்துக் கொண்டால் நாங்கள் எங்கே செல்வது என்று அதிகாரிகள் புலபுகிறார்கள். அதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

முதலமைச்சர் அறை மாற்றுவது குறித்து எ.வ வேலு எழுப்பிய கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார். அவர், “தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என கலைஞர் நினைத்தார். அம்மாவும் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் கால சூழ்நிலை மாறிவிட்டது. முதலமைச்சர் காலை முதல் மாலை வரை பலதரப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார். உயரதிகாரிகள் வரும்பொழுது அவர்கள் அமர்வதற்கான இடம் இன்னும் மேம்படுத்தப்படவில்லை.

முதலமைச்சரின் வேலைப்பளு மற்றும் புதிய திட்டங்கள் காரணமாக புதிய அறை தேவைப்படுகிறது. எல்லோரும் அமரக்கூடிய வகையில் புதிய அலுவலகம் அமைக்கப்படுகிறது. 100 சதுர அடி பரப்பளவு கூட இல்லாத அறையில் அதிகாரிகள் வேலை செய்துவருகிறார்கள். ஆகையால் அனைவரும் பரந்த இடததில் அமர்ந்து வேலை செய்யக்கூடிய வகையில்தான் முதலமைச்சர் தனது அலுவலகத்தை உருவாக்க உள்ளார். முதலமைச்சரை சுற்றி கிட்டத்தட்ட 80 பேர் அமர்ந்து வேலை பார்க்கும் வகையில், தற்காலிக ஏற்பாடாகத்தான் அவருடைய அறை மாற்றப்படுகிறது. இது அவரது தேவைக்கு அல்ல” என்று விளக்கமளித்தார்.

 முதலமைச்சரின் தனிச் செயலர்கள் 100 சதுர அடிக்கும் குறைவான சிறிய அறைகளில் பணியாற்றுவதுடன், முறையான கழிவறை வசதிகூட இல்லை என்றும் கூறினார். காலை முதல் மாலை வரை அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் தொடர்ந்து சந்திப்புகளை நடத்தி வருவதால், கூடுதல் இடவசதி தேவைப்படுவதாகவும் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்தார். புதிய அறைகள் அமைப்பது தொடர்பான டெண்டர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் அவர் தெரிவித்தார்.