பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

 
1 1

சீனா ஆக்கிரமிப்பு, அமெரிக்காவுடனான மோடியின் வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பேச அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளை கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? பாதுகாப்பு, பொருளாதாரம் தொடர்பாக எம்.பி.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் தர ஒன்றிய அரசு தயாராக இருக்க வேண்டும் என 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு முதலமைச்சர் வலிவுறுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வுகள் தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: 

மத்திய பாஜக அரசு, எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஏன் அஞ்சுகிறது?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் தெளிவான விளக்கத்தை அளிக்கவும் வேண்டிய கடமை மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு இருக்கிறது.எதிர்க்கட்சி எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்; நாட்டு நலனுக்காக பேசக் கூடிய எம்.பி.க்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் 8 எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.