ரூ.25,000 கோடி கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்த்த தவெக அரசு?

 
s

ரூ.25,000 கோடி மதிப்பிலான திருக்கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தவெக அரசு தாரைவார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tamil Nadu minister Ramesh says people voted for chief minister, not caste

கரூர் மாவட்டத்திலுள்ள புகழிமலை பாலசுப்ரமணியன் திருக்கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், குச்சிபாளையம் ரவீஸ்வரர் திருக்கோயில், வெங்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட நான்கு திருக்கோயில்களுக்கும் பாத்தியப்பட்ட 3084 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான தடை உத்தரவை நீக்கி ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்க வழிவகை செய்யும் பொருட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையருக்கு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரைத்துள்ள அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.இது இந்து கோயில்களுக்கு எதிரான வெட்கக்கேடான துரோகச் செயல் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த அளவிலான அநீதி, திமுக ஆட்சியில்கூட நடைபெறவில்லை என்றும் அந்த விமர்சனங்களில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆலயச் சொத்துகளைச் சூறையாடத் தொடங்கி தங்களின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது. கரூரில் உள்ள 4 முக்கியத் திருக்கோவில்களுக்குச் சொந்தமான ரூ.25,000 கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தாரைவார்க்கும் நோக்கில் அவற்றின் மீதான பத்திரப்பதிவுத் தடையை இந்து சமய அறநிலையத்துறை நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக, நேற்று (ஜூலை 9ஆம் தேதியன்று) காலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பரிந்துரைக் கடிதத்தை அனுப்புகிறார்; அதே நாளில் திருப்பூர் இணை ஆணையரின் பரிந்துரைக் குறிப்பும் வருகிறது; அதே ஜூலை 9-ஆம் தேதியன்றே சென்னையிலுள்ள ஆணையரும் மின்னல் வேகத்தில் தனது இறுதி உத்தரவைப் பிறப்பிக்கிறார். ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மூன்று முக்கிய அரசுத் துறைகள் இவ்வளவு அசுர வேகத்தில் கோப்புகளை நகர்த்தி இறுதி உத்தரவை வெளியிட்டதன் பின்னணி என்ன? திருக்கோவில் நிலங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் காட்டும் இந்த அசாதாரண வேகத்தை, மக்கள் நலப் பணிகளிலும் ஏழை எளிய மக்களின் தேவைகளிலும் இந்தத் தவெக அரசு காட்ட மறுப்பது ஏன்?


ஆக, திருக்கோவில்களின் சொத்துகளைக் காப்பதாகக் கூறிக்கொண்டே ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோகிறார் அமைச்சர் திரு. ரமேஷ் முந்தைய திமுக ஆட்சியில்கூட அரங்கேறாத இந்த இமாலயத் துரோகத்தை, ஆன்மீகப் போர்வையில் வந்துள்ள திரு. ஜோசப் விஜய் அரசு மிகத் துணிச்சலாகச் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உட்பட 4 கோவில்களின் 3,085 ஏக்கர் நிலங்களின் மீதான பத்திரப்பதிவுத் தடையை நீக்க ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை முதல்வர் திரு. விஜய் அவர்கள் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.