செந்தில் பாலாஜியை ஏன் கோவைக்கு அனுப்பினேன்?" - கரூரில் ரகசியத்தை உடைத்த ஸ்டாலின்..!

 
Stalin

கரூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "கரூரில் திமுகவின் வெற்றியை செந்தில்பாலாஜி ஏற்கனவே உறுதி செய்து விட்டார். அதனால் தான் நான் அவரை கோவையில் இருக்குமாறு பொறுப்பு வழங்கியுள்ளேன். கரூரை பொறுத்தவரையில் எனக்கு எந்த கவலையும் இல்லை. ஏனெனில் இது செந்தில் பாலாஜியின் மாவட்டம், 100 சதவீதம் வெற்றி உறுதி. திமுகவின் தேர்தல் அறிக்கைதான், இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார். நான் கலைஞரின் மகன், சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன். தமிழ்நாட்டின் நிதி நிலையை சீராக்கி, நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களே அதற்கு சாட்சி.

கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணியால் ஒரு இடத்தை கூட வெல்ல முடியவில்லை. அந்த விரக்தியில் தமிழ்நாட்டை பழி வாங்கும் நடவடிக்கையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி தன்னைத்தானே பெரிய புலனாய்வு புலி என்று நினைத்துக் கொண்டு, கலைஞர் கருணாநிதியும் வாஜ்பாயும் ஒன்றாக இணைந்திருக்கும் புகைப்படத்தை காட்டி பாஜகவுடன் திமுக கூட்டணியை வைத்துக் கொள்ளவில்லையா? என்று பேசி வருகிறார்.திமுக, பாஜக உடன் ஒரு காலத்தில் கூட்டணி வைத்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி போல அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்திருப்பதைப் போல, திமுகவை அடகு வைக்கவில்லை. குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது.

ஆனால், தற்போது அதிமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் பிடியும் பாஜகவின் அமித்ஷாவிடம் உள்ளது. பாஜகவுடன்-திமுக கூட்டணி வைத்த போது வளர்ச்சி திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசு நீட்டிய இடங்களில் எல்லாம் கையொப்பமிட்டு தமிழகத்தை அடகு வைத்து விட்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரித்து வாக்களித்தவர்கள் யார்? விவசாயிகள் பல மாதங்களாக டெல்லியில் போராடிய போது அதனை கொச்சைப்படுத்தும் விதமாக விவசாயிகளை புரோக்கர்கள் என்று கூறியது யார்? துரோகத்தை கூட டிசைன் டிசைனாக செய்து வருபவர் தான் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் இழைப்பதற்காக அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளன. இது ஒரு டப்பா என்ஜின் கூட்டணி. அவர்களுக்கு ஒரே நோக்கம் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியை தடுப்பதுதான். திமுகவை எதிர்ப்பதற்கு வலிமை இல்லாத பாஜக, அதிமுகவை விலைக்கு வாங்கியுள்ளது. திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் வைத்த எந்த கோரிக்கையும் பாஜக ஒன்றிய அரசு நிறைவேற்றிக் கொடுத்தது இல்லை.

இதுவரை சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி தர ஒன்றிய பாஜக அரசு முன் வரவில்லை. மதுரையில் துவக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலையில் உள்ளது என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. குடிநீர் திட்டத்திற்கு நிதி வழங்கவில்லை. இந்தி திணைப்பை தமிழக அரசு ஏற்கவில்லை என்பதற்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை கூட தரமறுக்கிறது.

தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், திமுக தான் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். இந்த தேர்தல் என்பது தமிழ்நாடு மற்றும் டெல்லி எண்ணிக்கை இடையேயான போட்டி. தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் மீண்டும் தொடர வேண்டுமென்றால், திமுக ஆட்சியில் தொடர வேண்டும். தமிழ்நாட்டில் கலவரங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றால், பாஜக-அதிமுக கூட்டணியை வேரோடு அகற்ற வேண்டும்.

இந்தத் தேர்தலில் நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக என்றார்.