அரசியலில் திடீர் திருப்பம் : காங்கிரஸின் புதிய இடைக்கால தலைவராக போகும் 'அந்த' மூத்த தலைவர் யார்?

 
1

அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதவிக்காலம், வரும் அக்டோபரில் முடிகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு, உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், ஹிமாச்சல் ஆகிய ஏழு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

வயது முதிர்வால் சிரமப்படும் கார்கே தலைமையில் ஏழு மாநில தேர்தலை சந்திக்க, கட்சியின் தேசிய நிர்வாகிகள் விரும்பவில்லை. அவர் தலைமையில் தேர்தலை சந்திப்பதாக இருந்தால், பதவிக்காலம் இன்னும் ஓராண்டு நீட்டிக்கப்பட வேண்டும்; அதை மேலிடம் விரும்பவில்லை.

எனவே, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோரில் ஒருவரை, இடைக்கால தலைவராக நியமிக்க, டில்லி தலைமை திட்டமிட்டுள்ளது. இதில், அசோக் கெலாட்டுக்கு வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

அடுத்த மாதம் 8, 9 ஆகிய தேதிகளில், டில்லியில் காங்., காரிய கமிட்டி கூட்டம் நடக்க உள்ளது. அதில், அகில இந்திய காங்., செயலர்கள் மாற்றப்பட உள்ளனர். மேலும், தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களின் காங்., தலைவர்களும் மாற்றப்பட உள்ளனர்.தமிழக காங்கிரசின் புதிய தலைவராக, எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி, விஷ்ணுபிரசாத், பிரவின் சக்கரவர்த்தி மற்றும் முன்னாள் எம்.பி., செல்லகுமார் ஆகியோரில் ஒருவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு, அகில இந்திய காங்., பொதுச்செயலர் பதவி வழங்கப்பட உள்ளது.தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், ''மாநில தலைவர் பதவியில் தொடர வேண்டாம் என என் உள்மனம் சொல்வதால், ராஜினாமா குறித்து கார்கேவிடம் பேசினேன். என் கோரிக்கையை ஏற்று, தலைமை என்னை விடுவிக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.