‘போலி விளம்பரத்தை நம்பாதீர்கள்.. வெளிநாட்டில் பல பேர் ஏமாந்து நிக்குறாங்க..’ எச்சரிக்கும் அதிகாரி

 
அதிகாரி

'இந்த போலி விளம்பரத்தை நம்பி தயவு செஞ்சு அந்த தப்ப பண்ணிட்டு சிக்கி தவிக்காதீங்க... வெளிநாட்டில் பல பேர் ஏமாந்து நிக்குறாங்க..’ என  வெளிநாட்டு வேலைக்காக செல்வோரை குடிப்பெயர்வோர் பாதுகாப்பு பிரிவு அதிகாரி ராஜ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து குடிப்பெயர்வோர் பாதுகாப்பு பிரிவு அதிகாரி ராஜ்குமார் கூறுகையில், “சமீபகாலமாக வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கம்போடியா, மியான்மர், லாவோஸ் போன்ற நாடுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரிமாறப்பட்டுவருகின்றனர். அதில் கஸ்டமர் கேர் சர்வீஸ், சிஸ்டம் வொர்க், டெலி மார்க்கெட்டிங், டிஜிட்டர் மார்க்கெட்டிங் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆள் எடுப்பதாக போலி போஸ்டர்கள் பகிரப்பட்டுவருகின்றன. எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் 70 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை சம்பளம் தருவதாக கூறி ஏமாற்றுகின்றனர். டூரிஸ்ட் விசா மூலம் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதாகவும் கூறி ஏமாற்றுகின்றனர். 

 

வெளிநாடுகளுக்கு சென்ற பின்னரே தாங்கள் ஏமாந்தது இளைஞர்களுக்கு தெரியவருகிறது. பிட்காயின் மோசடி, ட்ரேடிங் மோசடி உள்ளிட்ட விஷயங்களுக்கு இந்த இளைஞர்களை பயன்படுத்துகின்றனர். சொல்லும் வேலையை செய்யவில்லை எனில், ரூமில் அடைத்து சித்ரவதை செய்கின்றனர். மேலும் வேலைக்கு செல்லும் முன் போலி ஏஜெண்ட்டுக்கு ரூ.1 லட்சம் வரை பணம் கொடுத்து ஏமாறுகின்றனர்.  இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நபர்கள் என்ன செய்வதென தெரியாமல் வெளிநாட்டில் தவிக்கின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமே வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லவேண்டும். அதுவே பாதுகாப்பு.  அப்படி அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை emigrate.gov.in  என்ற வெப்சைட் மூலம் தொடர்பு கொள்ளலாம்.  மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 9042141222 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம். தயவு செய்து போலி விளம்பரத்தை நம்பி ஏமாந்துவிட்டு பிறகு வெளிநாடு சென்று தவிக்காதீர்கள்” என எச்சரிக்கிறார்.