நீக்கப்பட்டவர்கள் யார் யார்? செய்ய வேண்டியது என்ன?
தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டு, 5.43 கோடி பேர் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மொத்த வாக்காளர்களில் 15.18 சதவிகிதம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இறந்த வாக்காளர்கள் 26,32,672 பேரும், முகவரி இல்லாதவர்கள் 66,44,881 பேரும், இரட்டைப்பதிவுகள் 3,39,278 பேரும் என மொத்தமாக 97,37,832 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

மூன்று முறை பி.எல்.ஓக்கள் வீட்டுக்கு வந்தும் படிவத்தை முறையாக சமர்பிக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. அதேபோல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தரப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து திருப்பி தராதவர்களின் பெயர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்காது. அப்படி விடுபட்டவர்கள், படிவம் 6, படிவம் 8 மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை தந்து பெயரை புதிதாக சேர்த்துக்கொள்ளலாம். இச்சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக இணைக்க வேண்டும். SIR திட்டத்தின் போது உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால், கவலைப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


