கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்கு பொருந்துமோ இல்லையோ அதிமுகவிற்கு மிக கச்சிதமாக பொருந்தும் - மாணிக்கம் தாகூர்..!

 
1

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் “அதிமுகவை ஒன்றுமில்லாமல் ஆக்கிய பொறுப்பு தினகரனை சாரும்” என காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, நூற்றாண்டு கண்ட இயக்கம் இன்று தமிழ்நாட்டில் எந்த நிலையில் இருக்கிறது. காங்கிரஸின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. திமுக கூட்டணியில் இணைந்து பல்வேறு கட்சிகளுடன் சேர்ந்து இன்று தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சராக இருக்கும்போது, ‘எங்கள் கூட்டணி பலமான கூட்டணி. கொள்கை கூட்டணி’ என்றார். ஆனால், தற்போது கொள்கையும் இல்லை, கூட்டணியும் இல்லை. எல்லாம் போய்விட்டது. இன்று அவரது சுய லாபத்திற்காக திமுக தலைமையில் வெற்றி பெற்று, மாற்று அணிக்குச் சென்று பதவி வாங்கி இருக்கிறார்கள்” என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதில் கொடுத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்துக் கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவிற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும்.

மத்தியில் பாஜகவிற்கு அடிமையாக இருந்துவிட்டு, இப்போது கொள்கை பேசும் இபிஎஸ்-ன் இரட்டை வேடத்தை மக்கள் அறிவார்கள். எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எடப்பாடியாரே” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.