எங்கு சென்றாலும் விஜய்க்கு மவுசு குறையவில்லை - டெல்லியிலும் குட்டி ரோடு ஷோ..!!
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரையின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து முதலில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. விஜய் இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் இரண்டு முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு மூன்றாவது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பியது.அதற்கு விஜய் தரப்பில் இருந்து விசாரணையை 15 நாட்களுக்கு தள்ளி வைக்குமாறும், தேர்தல் பணிகள் காரணமாக விசாரணையை தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் நடத்திடுமாறும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கைகளை சிபிஐ நிராகரித்துவிட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ சம்மன் படி, விஜய் இன்று காலை 10 மணி அளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அதிகாரிகள் அவரிடம் சுமார் 7 மணி நேரம் வரை விசாரணை நடத்தி உள்ளனர். இதன்பின் மாலை 6 மணி அளவில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியே வந்தார். அப்போது அலுவலகத்தின் வெளியே காத்திருந்த தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு காரில் நின்றபடி சிரித்த முகத்துடன் கையசைத்து சென்றார். அது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.
மேலும், கரூர் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக, கரூர் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. வரும் மார்ச் 17 ஆம் தேதி அவரும் டெல்லிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செந்தில் பாலாஜி, '' கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினேன். என்னை போல மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கு வந்திருந்தனர். அவர்களுக்கும் சிபிஐ சம்மன் அனுப்புமா? விசாரணை முறையாக நடக்கின்றது என்றால் மருத்துவமனையில் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அனைவருக்கும் சிபிஐ சம்மன் வழங்கியிருக்க வேண்டுமே?'' என கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
CBI office at Delhi! #TNwithTVK Nov @TVKVijayHQ pic.twitter.com/p4LdSlt9la
— Hari (@HariNGVS) March 15, 2026

