சென்னையில் எங்கெங்கு தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயங்கும்..!
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, இந்த ஆண்டு செல்லும் வழித்தடங்களின் அடிப்படையில் 5 வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்படுகின்றன. எந்தெந்த ஊர்களுக்கு எந்த பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற முழுமையான விவரங்கள் இதோ....
சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்து இயக்கம்
பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் வெவ்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஐந்து இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.
1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் - கிளாம்பாக்கம்
2. கிளாம்பாக்கம் CMDA காலநிலை பூங்கா (தற்காலிக பேருந்து நிலையம்)
3. மறைமலை நகர் நகராட்சி திடல் (தற்காலிக பேருந்து நிலையம்)
4. புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் - கோயம்பேடு
5. மாதவரம் புதிய பேருந்து நிலையம்
மேலும், பேருந்து நிலையங்களுக்கு இடையே இலவச இணைப்புப் பேருந்துகள், 16 முக்கிய இடங்களில் இருந்து முன்பதிவு செய்த பயணிகளை நேரடியாக ஏற்றிச் செல்லும் பேருந்துகள், 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை, குடிநீர், கழிப்பறை, மின்னணுத் தகவல் பலகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்
1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களுக்குச் செல்லும் பெரும்பாலான வழக்கமான மற்றும் சிறப்புப் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
குறிப்பாக திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, காரைக்குடி, புதுக்கோட்டை, நாகர்கோவில், திண்டுக்கல், சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், ராமநாதபுரம், புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் (ECR அல்லாத வழித்தடம்) ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2. கிளாம்பாக்கம் சிஎம்டிஏ காலநிலை பூங்கா (தற்காலிக பேருந்து நிலையம்)
கிளாம்பாக்கம் பிரதான பேருந்து முனையத்தின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த அதன் அருகிலேயே இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து சேலம், கோயம்புத்தூர் வழியாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
3. மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையம்
டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக ஜி.எஸ்.டி சாலையில் இந்த தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது மறைமலைநகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ளது.
இங்கிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு பயணிகள் செல்வதற்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இலவச இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
4. கோயம்பேடு பேருந்து நிலையம்
சென்னைக்குள்ளே இருக்கும் பயணிகள் எளிதாக அணுகும் வகையில் வட மற்றும் மேற்கு மாவட்டங்களின் முக்கிய வழித்தடங்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
இங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாகச் செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பேருந்துகள்; காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு மற்றும் திருத்தணி வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
5. மாதவரம் பேருந்து நிலையம்
ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வடக்கு எல்லைப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுடன் சில வழக்கமான சேவைகளும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை உள்ளிட்ட வழித்தடங்களுக்கான பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
முன்பதிவு செய்தவர்களுக்கு முதன்முறையாக சிறப்பு வசதி
ஏற்கெனவே ஆன்லைனில் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் வரை செல்லத் தேவையில்லை. இவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள திருவான்மியூர், ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், சிறுசேரி, அடையாறு, பிராட்வே, எழும்பூர், அம்பத்தூர், தரமணி, தீவுத்திடல், கிண்டி, வேளச்சேரி, அசோக் பில்லர், பூந்தமல்லி, சைதாப்பேட்டை ஆகிய 16 தற்காலிக ஏறும் இடங்களில் (Boarding Points) இருந்தும் நேரடியாக பேருந்துகளில் ஏறிக் கொள்ளலாம்.
24 மணி நேர இலவச இணைப்புப் பேருந்துகள்
மேலும், பயணிகள் பேருந்துகள் புறப்படும் இடங்களுக்கு எளிதாக செல்ல ஏதுவாக, கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையிலும், அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மறைமலை நகர் மற்றும் காலநிலை பூங்கா தற்காலிக நிலையங்களுக்கும் 24 மணி நேர இலவச இணைப்புப் பேருந்துகள் மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படுகின்றன.
14 முன்பதிவு மையங்கள்
அரசு பேருந்துகளை TNSTC மொபைல் செயலி மற்றும் www.tnstc.in இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். இது மட்டுமல்லாமல், சென்னையில் 14 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து முனையத்தில் 10 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 மையங்களும், மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் 2 மையங்களும் செயல்படுகின்றன. இதன் மூலம் பயணிகள் தங்களது பயணச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
பேருந்துகளின் இயக்கம் தொடர்பான விவரங்களை பெறவும், பயணத்தின் போது ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன. அதன்படி, பயணிகள் 94450 14436 என்ற எண்ணிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 149 மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து நிலையங்களில் தகவல் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முக்கியப் பேருந்து நிலையங்களில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 93848 08333 என்ற வாட்ஸ்அப் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் பாதுகாப்புப் பணியில் 1500 போலீசார்
இதனிடையே, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம், ஜிஎஸ்டி சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தாம்பரம் மாநகர காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், வண்டலூர் சந்திப்பு மற்றும் ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மொத்தம் 1,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம், ஜி.எஸ்.டி. சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கேமராக்கள் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
பேருந்து நிலைய வளாகம் மற்றும் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம், உடைமைகள் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவானால் உடனடியாக வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது உடைமைகள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டாலோ அல்லது புகார்கள் தெரிவிக்க வேண்டியிருந்தாலோ அருகிலுள்ள காவல் உதவி மையங்களை அணுகலாம்" என்றனர்.

