கல்வி அமைச்சர் ராஜ்மோகன் படித்த "IIMAT" நிறுவனம் எங்கே இருக்கிறது? நெட்டிசன்கள் கிளப்பிய சர்ச்சை!

 
11

சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அதிகப்படியான இடங்களை கைப்பற்றி கூட்டணி ஆதரவில் ஆட்சியை கைப்பற்றியது. 

இந்நிலையில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் ராஜ்மோகனுக்குப் பள்ளிக் கல்வித்துறையும், தமிழ் வளர்ச்சித் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கல்வி அமைச்சராக அவர் பொறுப்பேற்ற நிலையில், தற்போது அவருடைய கல்வித் தகுதி குறித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்து, மக்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அமைச்சர் ராஜ்மோகன் பயின்றதாகச் சொல்லப்படும் "IIMAT" என்ற கல்வி நிறுவனத்தின் படத்தைப் பகிர்ந்துள்ள சமூக வலைத்தளப் பதிவுகள், "இதுதான் தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் படித்ததாகச் சொல்லும் நிறுவனம்" எனக் குறிப்பிட்டு விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இதனைத் தொடர்ந்து கல்வித்துறை சார்ந்த வல்லுநர்களும், அரசியல் பிரமுகர்களும் அமைச்சர் ராஜ்மோகனை நோக்கித் தங்கள் விமர்சனக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு நபர் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகிப்பதற்கு அவர் கண்டிப்பாகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் சட்டப்படியோ அல்லது நடைமுறைப்படியோ இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், தன்னிடம் இல்லாத ஒரு கல்வித் தகுதியை, இருப்பதாகவோ அல்லது தவறான தகவலாகவோ பொதுவெளியில் முன்வைப்பது முற்றிலும் தவறானது என்று அவர் சாடியுள்ளார். "பட்டம் பெற்றிருந்தால் தான் கல்வி அமைச்சராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாகச் சொல்வதுக் கூடாது; தமிழ்நாட்டிற்கு இது புதியது" என்று குறிப்பிட்டு, புதிய அரசின் மீதான தனது கண்டனத்தையும், அரசியல் ஒழுக்கத்தின் அவசியத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.