காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு பக்தர்கள் கொடுத்த, 312 சவரன் தங்க நகைகள் எங்கே..?
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு கடந்த, 2015ம் ஆண்டு, ஹிந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி போன்ற உற்சவ மூர்த்தி திருமேனிகளை வடிவமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதற்காக பக்தர்களிடம், 312 சவரன் தங்க நகை நன்கொடையாக பெறப்பட்டது.
இந்த திருமேனிகள் வடிவமைக்கும் போது, ஒவ்வொன்றிலும், 5 சதவீதம் தங்கம் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி, 8.7 கிலோ தங்கத்தை சேர்க்க வேண்டும். கடந்த, 2017ம் ஆண்டு அண்ணாமலை என்பவர், திருமேனிகளில் தங்கம் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தின் படி, தொடர்ந்த வழக்கில், கோர்ட் ஐ.ஐ.டி., குழுவை ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
ஆய்வில், ஒரு கிராம் தங்கம் கூட சேர்க்கப்படவில்லை என வெளியான அறிக்கை பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடுகளை கண்டறிந்து, இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். பக்தர்களால் வழங்கப்பட்ட, 312 சவரன் நகை எப்படி மாயமானது, எங்கே போனது என்பதையும், தமிழகத்தில் இது போல, வேறெந்த கோவில்களில் பக்தர்களால் கொடுக்கப்பட்ட நகைகள் மாயமாகியுள்ளது என்பதையும் கண்டறிய தனி நீதிபதி வாயிலாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


