விஜய் பதவியேற்பு எப்போது? திருமாவளவன் கையில் விஜய்யின் எதிர்காலம்!

 
1

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. 
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் தவெக வெற்றிப் பெற்றாலும், தனிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படுவதால் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதேசமயம், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் தவெக தரப்பில் ஆளுநரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை இந்த கோரிக்கையை நிராகரித்தது.

எனவே காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் கட்சிகளின் ஆதரவை நாடும் பணியில் தவெக கடந்த சில நாட்களாக தீவிரமாக களமிறங்கியது. இதன் விளைவாக, 5 தொகுதிகளில் வென்றுள்ள காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து தலா இரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளும் தங்களின் ஆதரவை வழங்குவதாக அறிவித்தன.

ஐயூஎம்எல் கட்சியிடம் தவெக சார்பாக மூன்று முறை நேரில் சந்தித்து ஆதரவு கேட்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் நீடிப்பதால் ஆதரவு தர இயலாது என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக விசிக நிர்வாகிகள் கூட்டம் திருமாவளவன் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் தவெகவுக்கு ஆதரவு தர பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் விசிக தரப்பில் அதன் தலைவர் திருமாவளவன் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தற்போது வரை 116 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தவெக தலைவர் விஜய்க்கு உள்ளது. திருமாவளவன் தங்கள் கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எண்களை தவெக பெறும். இந்நிலையில், விசிக கடிதத்தை எப்போது வழங்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. திருமாவளவன் நிலைப்பாட்டை பொறுத்தே புதிய அரசு எப்பொது பதவியேற்கு என்பது தெரியவரும்.