மேட்டூர் அணை நீர் திறப்பு எப்போது? விஜய் தீவிர ஆலோசனை..!
டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் வழக்கமான தேதியில் அணையை திறப்பது மற்றும் விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பது குறித்து தமிழக முதல்வர் விஜய் இன்று (ஜூன் 4) தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை உயர் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த ஆண்டு அணையைத் திறப்பதில் நிலவும் காலதாமதம் மற்றும் தண்ணீரின் இருப்பு குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 80 அடிக்கும் மேல் உள்ள நிலையில், வழக்கமாக 100 அடியை எட்டும்போது நீர் திறப்பது எளிதாக இருக்கும் என்பதால், விவசாயிகளின் தேவைக்கேற்ப தண்ணீரை எப்போது திறக்கலாம் என்பது குறித்தும், ஊரக உள்ளாட்சித் துறை விவகாரங்கள் குறித்தும் இந்த முக்கியக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

