கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது?

 
1

சென்னை பார்க் டவுனில் உள்ள சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில், சென்னை கோட்டம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும், அதன் உள்கட்டமைப்பு பணிகள் குறித்தும் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், சென்னை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள், "ரூ.720 கோடியில் எழும்பூர் ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் எழும்பூர் ரயில் நிலையம், பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகள் நடைபெற்ற வருகின்றன. மேலும் அனைத்து ரயில் நடைமேடைகளையும் இணைத்து மேற்கூரை அமைக்கப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலையம் நவீனப்படுத்தும் பணிகள் 2027 மார்ச் மாதம் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பணிகள் முடிவதில் மேலும் சில மாதங்கள் ஆகலாம்.

ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேடை வளையும் இடத்தில் பயணிகள் இறங்க சிரமமாக உள்ளது என ரயில்வே பாதுகாப்புத்துறை கூறியுள்ளது, அதை சரி செய்த பின்னர், ரயில்கள் நின்று செல்வதற்கு அனுமதி பெற்று இயக்கப்படும்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற முடிந்த பின்னர் நடைபாதை முழுவதும் சரியான முறையில் மேற்கூரைகள் அமைக்கப்டும். எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களை மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைத்து இயக்குவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளம்பாக்கம் ரயில் நிலையத்தை பராமரிப்பது தொடர்பாக மாநில அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாகவும், கிளம்பாக்கம் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் ஜிஎஸ்டி சாலையில் ஆகாய நடைபாதை பணிகள் மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்தனர்.

மேலும், "ரயில் நிலையத்தோடு இணைக்க வேண்டிய பணிகள் மீதம் உள்ளன. பராமரிப்பு பணிக்காக மாநில அரசு தொகை ஒதுக்கீடு செய்து அளித்துள்ளது. நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்த உடன் தீபாவளிக்கு முன்னர் அல்லது பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் கொண்டு வரப்படும். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் இடையே நடை மேம்பாலத்தை தமிழ்நாடு அரசு பராமரிக்க வேண்டும். அதற்குரிய இறுதிப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ரயில்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டால் ரயில் பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என கூறிய அவர்கள், சென்னை - ஹைதராபாத், சென்னை - பெங்களூரு, அதிவேக ரயில்கள் இயக்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அதற்குரிய பணிகள் தொடங்கப்படும். அதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம்" என தெரிவித்தனர்.