மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போ கிடைக்கும்..? அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

 
1

திருச்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற பின் அமைச்சர் ரமேஷ் பேசும்போது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த ஆட்சியில், மக்களின் தேவைகளைப் பெரும்பாலும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நல்லாட்சியாகவே இது இருக்கும். 

பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கும்போது, அதனை அன்றைய நாளிலோ அல்லது உடனடியாகவோ தீர்த்துவிட முடியாது என்ற நடைமுறைச் சூழ்நிலை என்பது அனைவருக்கும் தெரியும். 

அதிகாரிகள் இதனைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால், இதனைப் புரிந்துகொண்டு பொதுமக்கள் அரசுக்குச் சற்று அவகாசம் தர வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை குறித்துப் பேசிய அமைச்சர், "குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும். முதல்வர் விஜய் அறிவித்த இந்தத் திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கப்படும்போது, உங்கள் அனைவரின் பெயர்களும் அதில் கண்டிப்பாக இடம்பெற்றுவிடும்.இதுவரையில் வேறு ஏதேனும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வாங்கியவர்களுக்கும் சரி, அல்லது இதுவரை வாங்காத புதிய பயனாளிகளாக இருந்தாலும் சரி – இத்திட்டத்தைத் தொடங்கும்போது தகுதியுடைய அனைவரின் பெயர்களும் விடுபடாமல் சேர்க்கப்பட்டுவிடும்" என்று அமைச்சர் ரமேஷ் உறுதியளித்தார்.