“விஷாலே வரும்போது, விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்” - செல்லூர் ராஜூ ..

 
sellur raju

சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வரும்போது, பல படங்கள் ஹிட் கொடுக்கும் விஜய் தாரளமாக அரசியலுக்கு வரலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  

தமிழ் திரையுலகில் இருந்து நிறைய நடிகர்கள்  அரசியலுக்கு வந்துள்ளனர்.  உதாரணமாக எம்.ஜி.ஆர்,  சிவாஜி,  ஜெயலலிதா, நெப்போலியன், ராமராஜன், டி.ராஜேந்திரன், சரத்குமார்,  விஜயகாந்த், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர்.  ஆனால் அரசியலில் வெற்றி கண்டவர்கள் என்றால் வெகு சிலரை மட்டுமே சொல்ல முடியும். முதலில்  விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது,  அவருக்கு மிகப்பெரிய வரவேற்பும் எழுச்சியும் ஏற்பட்டது. ஆனால் அவரது உடல் நலம் குன்றியவுடன் கட்சியின் நிலைமையும் மாறிவிட்டது.  

vijay

இடைப்பட்ட காலத்தில் நடிகர் விஷாலும் அரசியலில் குதித்தார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அவர் பின்னர் வாபஸ் பெற்றார்.  அடுத்ததாக விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  தனது ரசிகர் மன்றத்தையும் கடந்த சில ஆண்டுகளாக  விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அரசியல் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.  

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  “எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும்தான். பாஜகவும், காங்கிரசும் எங்கள் நண்பர்கள்தான். எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் ஒரு சில வெற்றி படங்கள் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வந்துள்ளார்.  பல வெற்றி படங்கள் கொடுக்கும் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்” என்று தெரிவித்தார்.  நடிகர் விஜய் விரைவில் தனது அரசியல் வருகை குறித்து அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.