சிறை கைதிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போது, பள்ளி மாணவர்கள் சாப்பிட கூடாதா? ராஜ்மோகன்

 
Q

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 15.30 லட்சம் பள்ளி மாணவர்கள் பலனடைவார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "மாணவர்களுக்கு தினமும் சலிப்பு தட்டாத வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலை உணவுத் திட்டத்தில் மேலும் பல புதிய உணவு வகைகளைச் சேர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்க சிறப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும் உணவின் தரம் குறித்துப் பேசிய அவர், "சிறைக் கைதிகள் வரை சிக்கன் பிரியாணி சாப்பிடும் போது, நாட்டைக் கட்டியெழுப்பப்போகும் பள்ளி மாணவர்கள் சாப்பிடக் கூடாதா? எனவே, எதிர்காலத்தில் மிகவும் சுகாதாரமான முறையில் தயாரித்து பள்ளிகளிலேயே மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

கொள்கை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், "இருமொழிக் கொள்கை என்பதில் தமிழக அரசு மிகவும் உறுதியாக உள்ளது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல" என்றும் தெளிவுபடுத்தினார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வருகைப் பதிவை அதிகரிக்கும் நோக்கிலும், அவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையிலும் இத்திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.