வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்..! இனி போன் நம்பர் தேவையில்லை..!
வாட்ஸ் அப் பயனர்களுக்கு இந்தாண்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில் மெட்டா பல அப்டேட்டை வழங்கி வருகிறது. மெசேஜ், வாய்ஸ் கால், பணி தொடர்பான விசயங்கள், வீடியோ ஷேரிங், புகைப்படம், ஃபைல்கள் ஷேர் செய்வதற்கு மட்டுமல்லாமல் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காகவும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. வீடியோ கால் வசதிகளில் ஃபில்டர்கள், அதிக MB ஃபைல்களை பகிர்வது, வீடியோ காலில் அதிக நபர்கள் இணையலாம் ஆகிய பல அப்டேட்களை மெட்டா வழங்கியது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. பண பரிவர்த்தனை செய்வது, பிசினஸ் தேவைகளுக்காக நோட்ஸ், ரிமைன்டர் என பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது. இன்னும் பல வசதிகளை வாட்ஸ் அப் உருவாக்கி வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்கள் தொலைபேசி எண்ணை பகிராமலேயே மற்றவர்களுடன் உரையாடும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் பிரைவசியை கருத்தில் கொண்டு, புதிதாக 'பயனர் பெயர்' (Username) என்ற வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தாமல், ஒரு தனித்துவமான பயனர் பெயர் மூலம் நீங்கள் எளிதாக வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ள முடியும்.
இதுவரை வாட்ஸ்அப்பில் புது சாட்டை ஆரம்பிக்க வேண்டும் என்றால், மொபைல் எண்களைப் பரிமாறிக்கொள்வது கட்டாயமாக இருந்தது. இதனால் பல நேரங்களில் நம்முடைய தனிப்பட்ட எண்கள் தேவையில்லாத நபர்களுக்கும் தெரியவரும் சூழல் இருந்தது. ஆனால், இனி அந்த கவலை வேண்டாம். உங்க மொபைல் எண்ணுக்குப் பதிலாக, இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களைப் போல தனித்துவமான 'யூசர்நேம்' (Username) மூலமாகவே நீங்க மற்றவர்களுடன் பேச முடியும்.
இது யாருக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்?
குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெற்றோர் வாட்ஸ்அப் குரூப்கள், அப்பார்ட்மென்ட் அல்லது ஏரியா வாட்ஸ்அப் குரூப்கள், ஆன்லைன் மார்க்கெட்பிளேஸ் (Marketplace) வழியாகப் பொருட்கள் வாங்கும்/விற்கும் போது, பொது நிகழ்ச்சிகள் அல்லது பிசினஸ் மீட்டிங்குகளில் சந்திக்கும் புதிய நபர்கள், இனி இவர்களுக்கெல்லாம் உங்க ஃபோன் நம்பரை தராமல், வெறும் 'யூசர்நேம்' மட்டும் கொடுத்து ஸ்மார்ட்டாக பேசலாம். உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துவதால், உங்களுக்கு பிடித்த பெயர் மற்றவர்களுக்குப் போய்விடக் கூடாது என்பதற்காகவே இந்த முன்கூட்டிய முன்பதிவை வாட்ஸ்அப் தொடங்கியுள்ளது.
உங்கள் வாட்ஸ்அப் செயலியைப் புதிய பதிப்பிற்கு (Latest version) அப்டேட் செய்யவும். Settings > Account > Username என்ற பகுதிக்குச் செல்லவும். பிடித்த யூசர்நேமை டைப் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். (நீங்க நினைத்த பெயர் கிடைக்கவில்லை என்றால், வாட்ஸ்அப் காட்டும் மாற்றுப் பெயர்களைத் தேர்வு செய்யலாம்). இந்த ஆப்ஷன் இன்னும் உங்க மொபைலில் வரவில்லை என்றால் பதற்றப்பட வேண்டாம். இது படிப்படியாகத் தான் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. உங்க கணக்கிற்கு இந்த வசதி கிடைக்கும் போது வாட்ஸ்அப் உங்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பும்.
பொதுவாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் யூசர்நேம் இருந்தால் யார் வேண்டுமானாலும் நம்மைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். ஆனால், வாட்ஸ் அப் இதில் முற்றிலும் மாறுபட்டது. வாட்ஸ்அப்பில் உங்களைத் தேட எந்த ஒரு பொதுவான டைரக்டரியோ அல்லது தேடுபொறியோ இருக்காது. உங்களது துல்லியமான யூசர்நேம் தெரிந்தால் மட்டுமே ஒருவரால் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். இதனால், தேவையில்லாத ஸ்பேம் (Spam) மெசேஜ்கள் வராது.
இன்னும் ஒருபடி மேலே போய், வாட்ஸ்அப் 'யூசர்நேம் கீ' என்ற ஆப்ஷனையும் வழங்குகிறது. இதை நீங்க ஆன் செய்து வைத்தால், புது நபர் மெசேஜ் அனுப்ப உங்க யூசர்நேமோடு சேர்த்து இந்த 'ரகசிய கீ'-யையும் டைப் செய்ய வேண்டும். இந்த கீ-யை நீங்க எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என்பதால், உங்களுக்கே தெரியாமல் உங்க யூசர்நேம் லீக் ஆனாலும் யாரும் உங்களைத் தொந்தரவு செய்ய முடியாது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்கள், தங்களின் பிராண்ட் அடையாளத்தை மாற்றாமல் இருக்க, அதே இன்ஸ்டா/ஃபேஸ்புக் யூசர்நேமையே வாட்ஸ்அப்பிலும் முன்பதிவு செய்து கொள்ள மெட்டா நிறுவனம் வழிவகை செய்துள்ளது.
இந்த யூசர்நேம் அம்சம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தாலும், உங்களுடைய தற்போதைய சாட்கள் மற்றும் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் காண்டாக்ட்கள் எவ்வித மாற்றமும் இன்றி எப்போதும்போல வழக்கம் போல் செயல்படும். புதிய நபர்களிடம் பேசும்போது மட்டுமே இந்த யூசர்நேம் விதிமுறை பொருந்தும். வாட்ஸ்அப்பின் மாஸ் அப்டேட், ஆன்லைன் உலகை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

