என்ன நடக்கிறது பல்கலைக்கழகத்தில்...! பதிவாளர் அறையின் பூட்டை உடைத்து, புதிய பதிவாளர் பொறுப்பேற்பு..!
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், துணைவேந்தராக உள்ள க.சங்கர், பொறுப்பு பதிவாளராக இருந்த சி.தியாகராஜன் இருவரும் ஒருவர் ஒருவரை பதவியில் இருந்து விடுவிப்பதாக கூறி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை பல்கலைக்கழகத்துக்கு வந்த, பதிவாளர் பொறுப்பாக இருந்த தியாகராஜன் அலுவலக வேலைக்கான சாவியை வழங்க மறுத்து, வேறொரு அறையில் அமர்ந்திருந்தார்.
மேலும், தியாகராஜனின் ஆதரவாக செயல்படும் பேராசிரியர்கள், மீண்டும் அவரை பணியில் தொடர வேண்டும் எனக் கூறினர். இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் சார்பில், பொறுப்பு பதிவாளராக புதியதாக அறிவிக்கப்பட்ட வெற்றிச்செல்வன் பதவி ஏற்க முயன்றார். இந்நிலையில் பதிவாளர் அறையானது பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த அறையை பல்கலைக்கழக பணியாளர்கள் உடைத்து, வெற்றிச்செல்வனை பதவி ஏற்க வைத்தனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.