விசில் சின்னத்தால் வந்த வினை? தூய்மைப் பணியாளரின் விசிலை பறித்த கவுன்சிலர்..!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கி விட்டன. இந்த தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களம் காண உள்ளது. இதனிடையே, அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அண்மையில் விசில் சின்னத்தை ஒதுக்கியது.
இதையடுத்து, தவெக பொதுக்கூட்டங்களிலும், பிரச்சாரத்திலும் அக்கட்சியினர் விசில் ஒலி எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தவெகவினரின் இந்த செயலை திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில்தான், சிவகங்கையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக, தமிழகம் முழுவதுமே தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று விசில் ஒலி எழுப்புவர். அந்த சத்தத்தை கேட்டதும், வீட்டில் உள்ளவர்கள் குப்பையை எடுத்து வந்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுப்பார்கள்.
அந்த வகையில், சிவகங்கை நகராட்சியின் 21வது வார்டில் தூய்மைப் பணியாளர்கள் வழக்கம் போல விசில் அடித்தபடி குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த வார்டின் கவுன்சிலர் அயூப் கான், தூய்மைப் பணியாளரின் விசிலை வாங்கி அதை குப்பையில் போட்டார்.
பின்னர், குப்பை சேகரிப்பு குரலை எழுப்பும் ஸ்பீக்கரை அவரிடம் அயூப் கான் கொடுத்தார். "இனி எனது வார்டில் விசில் அடித்து குப்பையை சேகரிக்கக் கூடாது. அதற்கு பதில் ஸ்பீக்கரை பயன்படுத்த வேண்டும்" எனக் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. தவெகவுக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியதால்தான், திமுக கவுன்சிலர் இவ்வாறு செய்துள்ளார் என தவெக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முன்னதாக, நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, மைதானத்துக்குள் யாரும் விசில் எடுத்துச் செல்லக்கூடாது என போலீசார் உத்தரவிட்டனர். மைதானத்திற்குள் மட்டுமின்றி மைதானத்திற்கு வெளியேயும் விசிலுக்கு போலீசார் தடை விதித்தனர்.
போட்டியை நடந்ததும் ஐசிசி சார்பில் விசிலுக்கு எந்த தடையும் விதிக்கப்படாத பட்சத்தில், போலீசார் விதித்த இந்த கட்டுப்பாட்டால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதால்தான் இந்த தடையை போலீசார் விதித்ததாக அக்கட்சியினர் விதித்தனர்.

