"மேட் இன் பாரத்" - உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்க சத்குரு சொன்ன ரகசியம் என்ன?

 
1

ஈஷா யோக மையத்தில், சத்குரு அகாடமி சார்பில் ‘பிராண்ட் இன்சைட்’ எனும் தலைமைத்துவ நிகழ்ச்சி பிப். 27-ஆம் தேதி துவங்கி மார்ச் 1 வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் நேற்று (27/02/2026) பங்கேற்று பேசிய சத்குரு, “மேட் இன் பாரத் என்றால் உலகிலேயே மிகச்சிறந்தது என்ற வகையில் பிராண்டுகளை உருவாக்க வேண்டும்” எனப் பேசினார்.

ஈஷாவில் 3-நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் உயர் நிர்வாக அதிகாரிகள் மத்தியில் சத்குரு பேசுகையில், “மேட் இன் பாரத் அதாவது இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் என்றால் அதுதான் உலகிலேயே மிகச்சிறந்தது என்பதை உறுதி செய்யும் வகையிலான பிராண்டை நீங்கள் உருவாக்க வேண்டும். 'பாரதம்' என்ற பிராண்ட் சிறந்த முறையில் கட்டமைக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும், ஏனெனில், நாடு என்பதே சிறந்த பிராண்டாக கட்டமைக்கப்படும்போது, வெறும் வணிகங்கள் மட்டுமல்லாமல் உலகளவில் அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் மதிப்பும் மேம்படுகிறது.

உங்களில் பலர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்கிறீர்கள். கடந்த 5 முதல் 8  ஆண்டுகளில், இந்திய பாஸ்போர்ட்டை காட்டும் போது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மக்கள் உங்களைச் சற்றே கூடுதல் மரியாதையுடன் பார்ப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதுதான் பிராண்ட் பில்டிங். இந்தியா தனது பிராண்டை விழிப்புணர்வாக கட்டமைத்துள்ளது. அது நல்லது. ஆனால் அது போதுமானதாக இல்லை. பாரதம் என்ற பிராண்டை இன்னும் பெரியதாக உருவாக்க வேண்டும். பாரதத்தின் பிராண்ட் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கட்டமைக்கப்பட்டால், மற்ற அனைத்து பிராண்டுகளுக்கும் கதவுகள் மிக எளிதாகத் திறக்கும். அது நடக்க வேண்டும்.

மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் 'பிராண்டிங்' முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு யோகா ஒரு சிறந்த உதாரணம். யோகா தரும் அற்புதமான பலன்களையும், அது வேலை செய்யும் விதத்தையும் பார்த்தால், உலகத்திலுள்ள அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், நீண்ட காலமாக யோகா சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. இந்த நிலையை மாற்ற நான் முயற்சி எடுப்பதால் என் மீது பல விமர்சனங்கள் வருகின்றன. மனித வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் யோகா குறித்து இன்றும் பலருக்குத் தெரியவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.” எனக் கூறினார்.


‘விழிப்புணர்வுடன் கூடிய பிராண்டிங்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு, வணிக நிறுவனங்களின் பிராண்டிங் துறை உயர் அதிகாரிகளுக்கு வழிகாட்டும் வகையில் சத்குருவால் 'பிராண்ட் இன்சைட்' நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது. சத்குரு அகாடமி சார்பில் 2023-ஆம் ஆண்டு முதல் ஈஷாவில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி, ஒரு பிராண்டை எப்படி வெற்றிகரமாக உருவாக்குவது என்பது தொடர்பான யுக்திகள், நுணுக்கங்கள், கருவிகள் உள்ளிட்டவற்றை பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.

இந்தாண்டு நிகழ்ச்சியில் ‘ஸ்டார்ம் தி நார்ம்’ நிறுவனத்தின் சி.ஈ.ஓ அனிஷா மோத்வானி தலைமையிலான நிபுணர்கள் குழுவுடன், ‘ஸ்டோரிவாலாஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் அமீன் ஹக், ‘டிஸ்ரப்ஷன் கன்சல்டிங்’ நிறுவனத்தின் கிருஷ்ணன் சுப்ரமணியன், ‘ஃபிளிப்பர் கன்சல்டிங்’ நிறுவனத்தின் ராகுல், ஓகில்வி நிறுவனத்தின் சோனல் தப்ரால் மற்றும் டென்ட்சு தெற்காசியாவின் தலைவர் நாராயண் தேவநாதன் உள்ளிட்ட முன்னணி வல்லுநர்கள் பயிற்சிகளை வழங்குகின்றனர்.

சத்குருவால் தொடங்கப்பட்ட சத்குரு அகாடமி, வணிகத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தனித்துவமான தலைமைத்துவ மற்றும் தொழில்முறை மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குகிறது.