ஜெம் வீரமணி வீட்டில் 6 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் கிடைத்தது என்ன?
சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியின் சென்னை ராயப்பேட்டை வீட்டில், சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (SIT) 6 மணி நேரத்திற்கும் மேலாக அதிரடிச் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட வீரமணியின் கார் ஓட்டுநர் பாலாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் பின்புறத்தில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டதைத் தான் பார்த்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், "வீட்டின் நீச்சல் குளப் பகுதிக்குச் செல்ல வேண்டாம், அங்கு பேய் இருக்கிறது" என ஓட்டுநர் பாலா தங்களை மிரட்டியதாகத் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே பாலாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து, காவல்துறையினர், மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ராயப்பேட்டை வீட்டிற்குள் ஜேசிபி (JCB) இயந்திரத்தைக் கொண்டு வந்து, நீச்சல் குளம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பல இடங்களில் பள்ளம் தோண்டிச் சோதனையிட்டனர். ஆனால், மாலை 6.30 மணி வரை நடைபெற்ற இந்தத் தீவிரச் சோதனையில் மனித உடல்களோ, எலும்புகளோ அல்லது முக்கியத் தடயங்களோ எதுவும் சிக்கவில்லை எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஓட்டுநர் பாலா அளித்த வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த வீரமணி தரப்பு வழக்கறிஞர் விக்னேஷ், "முன்னறிவிப்பின்றி ஜேசிபி இயந்திரத்துடன் வந்து வீட்டின் பகுதிகளைச் சேதப்படுத்திச் சோதனை நடத்தியும் எதுவும் கிடைக்கவில்லை; காலையில் சோதனைக்கு வந்துவிட்டு மாலையில் நோட்டீஸ் வழங்கியிருப்பது சட்டவிரோதம் என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

