என்னடா பித்தலாட்டம் இது..! கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவுக்காக தற்போது நடவடிக்கையா ? அண்ணாமலை

 
1

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக பாஜக தலைமை அண்மையில் அதிரடியாக அறிவித்தது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் வந்திருக்கிறேன் என்றும், டெல்லி அரசியலில் விருப்பமில்லை எனவும் அண்ணாமலை கூறி வந்த நிலையில், பாஜக தலைமை அவரது பெயரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சூழலில், தனது பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல், கோவையில் சூறாவளி பிரச்சாரத்தில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார்.

மேலும், கோவையில் தன்னை தோற்கடிப்பதற்காக திமுக அமைச்சர்கள் பலரும் இங்கு பணத்தை செலவழித்து வருவதாகவும், ஆனால் ஒரு ரூபாய் கூட மக்களுக்கு கொடுக்காமல் தான் ஜெயித்து காட்டுவதாகவும் அண்மையில் சவால் விட்டு பேசியிருந்தார் அண்ணாமலை.

இந்த சூழலில், ஒரு வீடியோ சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு வீட்டுக்கு செல்கிறார். அப்போது அங்கிருக்கும் பெண் அவருக்கு ஆரத்தி எடுக்கிறார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் கையில் ஆரத்தி தட்டுக்கு கீழே அண்ணாமலை ஏதோ ஒன்றை கொடுக்கிறார். இந்நிலையில், ஓட்டுக்காக அண்ணாமலை பணம் கொடுத்ததாக திமுக உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டினர். மேலும், அண்ணாமலை வேட்பாளர் அந்தஸ்தில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு காணொலியின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்த போதிலும், ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டு என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவுக்காக தற்போது நடவடிக்கை எடுக்க பார்க்கிறார் கோவை கலெக்டர் அவர்கள்.

அன்பு, மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நம் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. தேர்தல் சமயங்களில் மட்டும் நாங்கள் (பாஜக) இதை கடைப்பிடிப்பதில்லை. பிறரை போல, பணத்தின் மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. இன்று இதுபோல பொய்களை பரப்பும் கட்சிகள், வாக்குகளுக்காக பணம் கொடுக்கும் போது கோவை கலெக்டர் விழிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என அண்ணாமலை கூறியுள்ளார்.