இது என்ன நியாயம் ? தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை குறிவைத்து முடக்குவது..!

 
1

தேர்தல் தருணத்தில் ஒரு கட்சியின் வங்கிக்கணக்குகளை முடக்குவது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் மட்டுமன்றி அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது என்றும், ஜனநாயகத்தை காப்பாற்ற இது போன்றவற்றை தேர்தல் ஆணையம் தடுத்தாக வேண்டும் என்றும் சச்சின் பைலட் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், ”அப்படியே வங்கிக் கணக்குகளை முடக்குவதாக இருப்பின், தேர்தல் பத்திர மோசடி மூலம் பெரும் தொகையை குவித்திருக்கும் பாஜகவின் கணக்குகளைத்தான் முடக்க வேண்டும்” என்றார்.

“தேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை மத்திய அரசு எப்படி நடத்துகிறது என்பதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸின் வங்கிக் கணக்குகளுக்கு சீல் வைப்பது, அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்வது போன்றவை தேர்தல் நடத்தை விதிகள் மற்றுமன்றி, அடிப்படை அறநெறிகளையும், அரசியலமைப்பு சட்டங்களையும் மீறுவதாகும். மேலும் இவை ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாகும். பாஜகவின் இந்த ஆக்கிரமிப்பு அரசியலை தேர்தல் ஆணையமும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தேர்தல் பத்திரங்களை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடியை பாஜக அரங்கேற்றி இருக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அரசு நிறுவனங்களை பயன்படுத்தி, நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசடி உலகிலேயே முதல்முறையாக இந்தியாவில்தான் அடையாளம் காணப்பட்டுள்ளது” என்றும் சச்சின் பைலட் சாடினார்.